ADDED : ஜூன் 29, 2025 07:04 AM

பெங்களூரு : கர்நாடகா முழுதும், எஸ்.சி., பிரிவினர் கணக்கெடுப்பி விஷயத்தில், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் கள்ளாட்டம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வீடு வீடாக ஆய்வு செய்யாமல், ஸ்டிக்கர் ஒட்டிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.
கர்நாடக அரசு, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம் மூலமாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை பெற்றிருந்தது. இதில் குளறுபடிகள் உள்ளதாகக்கூறி, பா.ஜ., உட்பட, பலரும் இதை ஏற்கவில்லை. அறிக்கைக்கு எதிராக மடாதிபதிகளும் குரல் கொடுத்தனர்.
சில மாதங்களாக, ஜாதி வாரி அறிக்கை, மாநில அரசியலில் சூறாவளியை கிளப்பியது.
இந்த நிலையில் முதல்வர் சித்தராமையாவும், எஸ்.சி., பிரிவினர் குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்தார். வீடு வீடாக சென்று, ஆய்வு நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்காக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
எஸ்.சி., சமூகத்தினர், தாங்களாகவே முன்வந்து பதிவு செய்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கள்ளாட்டம் ஆடுகின்றனர். வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இவர்கள் வீடு தோறும் சென்று தகவலை சேகரிக்கவில்லை. மாறாக கணக்கெடுத்ததாக வெளிப்புற சுவற்றில் ஸ்டிக்கரை ஒட்டிவிட்டுச் செல்கின்றனர்.
வீடுகளில் ஆட்கள் இருந்தாலும், அவர்களிடம் தகவல் பெறுவதில்லை. சிவாஜி நகர், ஸ்ரீநகர், பனசங்கரி, இஸ்ரோ லே - அவுட், குமாரசாமி லே - அவுட், பத்மநாப நகர், விட்டல் நகர் உட்பட, பல்வேறு பகுதிகளில், ஆய்வு செய்யாமல் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
மக்களே ஆன்லைனில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் செயலுக்கு அதிருப்தி தெரிவிக்கின்றனர். 'மக்களிடம் தகவல் பெறாமல், வீட்டின் கதவிலும், சுவற்றிலும் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கின்றனர். இத்தகைய போலியான ஆய்வு தேவையா?' என, கேள்வி எழுப்புகின்றனர்.
