ADDED : மே 12, 2026 11:26 PM
சிக்கமகளூரு: ஒரே குடியிருப்பு பகுதியில், மூன்று பாம்புகள் புகுந்தன.
சிக்கமகளூரு நகரின், பிதரே கிராமத்தில் சில நாட்களாக பாம்புகளின் தொல்லை அதிகரித்துள்ளது. வெப்பத்தை தாங்க முடியாமல் அவை வெளியேறுகின்றன. குளிர்ச்சியான இடத்தை தேடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, மக்களை அச்சுறுத்துகின்றன.
நேற்று அதிகாலை மூன்று பாம்புகள், உணவு தேடி, அந்த கிராமத்தில் நுழைந்தன. ராமேகவுடா, தேவராஜே கவுடா, நாகரத்னா ஆகியோரின் வீடு முன் இருந்த கோழி கூடுகளுக்குள் புகுந்தன. அதில் இருந்த கோழி முட்டைகளை தின்றன. அதில் ஒரு பாம்பு, 21 முட்டைகளை விழுங்கியது.
அளவுக்கு அதிகமான முட்டைகளை விழுங்கியதால், உடலின் பாரம் அதிகரித்து, கோழி கூட்டில் இருந்து, வெளியே வர முடியாமல், உள்ளேயே சிக்கிக்கொண்டது.
கோழிகளின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டு உரிமையாளர் வெளியே வந்து, கோழி கூண்டுக்குள் பார்த்தார். அப்போது, பாம்பு உள்ளே இருப்பது தெரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பிடிக்கும் நிபுணர் ஆல்பர்ட்டுக்கு தகவல் கொடுத்தார்.
அவரும் கிராமத்துக்கு வந்து, நாகப்பாம்பு உட்பட, மூன்று பாம்புகளையும் மீட்டு, எலேகல்லு அருகில் உள்ள வனத்தில் அவற்றை விட்டார்.
இது குறித்து, ஆல்பர்ட் கூறுகையில்,கோடைக்காலம் என்பதால், குளிர்ச்சியான பகுதியை தேடி மற்றும் உணவு, தண்ணீர் தேடி பாம்புகள் ஊருக்குள் வரு வது சகஜம். கோழி கூடு, கொட்டகைகளுக்குள் பாம்புகள் நுழைய வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை அவசியம், என் றார்.
