/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.2,000த்தில் சிறப்பு 'பேக்கேஜ்' திட்டம்
/
சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.2,000த்தில் சிறப்பு 'பேக்கேஜ்' திட்டம்
சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.2,000த்தில் சிறப்பு 'பேக்கேஜ்' திட்டம்
சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.2,000த்தில் சிறப்பு 'பேக்கேஜ்' திட்டம்
ADDED : ஜூன் 12, 2025 07:56 AM

மைசூரு : கன்னட ஆடி மாதத்தை ஒட்டி, சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு 2,000 ரூபாயில் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகம் செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக, மைசூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில், நேற்று சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்துக்கு ஊடகத்தினர் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் முடிந்த பின், அதிகாரிகள் கூறியதாவது:
கன்னட ஆடி மாதம் இம்மாதம் துவங்க உள்ளது. இம்மாதத்தில் ஜூன் 27, ஜூலை 4, 11, 18 ஆகிய வெள்ளிக்கிழமையும், 17ல் சாமுண்டீஸ்வரி பிறந்த நாளான வர்தந்தியன்று சாமுண்டீஸ்வரியை தரிசிக்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர்.
பக்தர்கள் வசதிக்காக, இம்முறை '2,000 ரூபாயில் சிறப்பு பேக்கேஜ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அத்துடன் 300 ரூபாய்க்கு சிறப்பு தர்ஷன் டிக்கெட் அறிமுகம் செய்யப்படும்.
இப்புதிய பேக்கேஜில், சாமுண்டீஸ்வரியின் சிறிய விக்ரஹம், தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அம்பாரி யானை சிலை, குங்குமம், பூஜித்த கயிறு இருக்கும். இத்திட்டம் தொடர்பாக ஆலோசித்து, அமைச்சர் அறிவிப்பார்.
வழக்கம் போல் இலவச தரிசனத்துக்கும், ஒவ்வொரு லட்டும் 25 ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றி சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர், கழிப்பறை வசதிக்கும் ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க, வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டி மலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். கடந்த ஆண்டு போன்றே, மலை அடிவாரத்தில் இருந்து அரசு பஸ்களில், பக்தர்கள் இலவசமாக அழைத்து செல்லப்படுவர்.
கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா, ஒளி அமைப்பு அமைக்கப்படும். மலையிலும், லலித மஹால் அரண்மனை அருகிலும், மருத்துவ குழுவினர், தீயணைப்பு படையினர் தயாராக இருப்பர்.
படிக்கட்டுகள் வழியாக வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் கூடுதலாக வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.