/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
/
ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
ADDED : மே 24, 2025 04:45 AM
கோலார்:மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்களை தேர்ந்தெடுக்க ஓட்டுப்போட வேண்டிய கூட்டுறவுச் சங்கத்தினர், 'ஜாலி சுற்றுலா' பயணத்தில் உள்ளனர். ஓட்டுப் பதிவு தினமான வரும் 28ம் தேதி தான், கலெக்டர் அலுவலகத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.சி.சி., வங்கி எனும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோலார்- - சிக்கபல்லாபூர் கூட்டுறவு வங்கி கிளையின் 18 இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 28ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
18 இயக்குநர்கள்
கோலார்- சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தின் 14 முதன்மை தாலுகா விவசாய கடன் கூட்டுறவு சங்கங்கள்; இரண்டு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்; ஒரு டி.ஏ.பி.சி.எம்.எஸ்., எனும் தாலுகா விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதல் வர்த்தக கூட்டுறவு சங்கம்; ஒரு- ஓ.சி.எஸ்.பி.ஓ., எனும் டி.சி.சி., வங்கியில் சேவையில் உள்ள மற்ற கூட்டுறவு சங்கங்கள் என 18 சங்கங்களுக்கு இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,கள் தங்கவயல் ரூபகலா, பாகேபள்ளி சுப்பாரெட்டி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். மீதி 16 இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்தோர், நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
வாபஸ்
இவர்களில் மாலூர் தாலுகா விவசாயிகள் கடன் கூட்டுறவுச் சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த முனுசாமி என்பவர் வாபஸ் பெற்றதால் ரமேஷ்; சித்லகட்டா தாலுகா முதன்மை விவசாயிகள் கடன் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த டி.எச்.நாகராஜ் என்பவர் வாபஸ் பெற்றதால், ஜி.நாகராஜ்; மஞ்சேன ஹள்ளி தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த ஜெகந்நாத் என்பவர் வாபஸ் பெற்றதால் ஹனுமே கவுடா; தாலுகா விவசாய உற்பத்தியாளர் சந்தைப் படுத்துதல் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த லக்கப்பா என்பவர் வாபஸ் பெற்றதால், மஞ்சுநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் 18 இயக்குனர்கள் தேர்தலில் ஆறு பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால், 12 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடக்கிறது. இன்று முதல் இச்சங்கத்தினர் வாக்காளர்களுக்கு வலை வீசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
களத்தில் உள்ளோர்
கோலார் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் எம்.ஆனந்த் குமார், கே.வி.தயானந்த், கே.எம்.முனிராஜ் ஆகிய மூவரும்; பங்கார்பேட்டை தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் வி.மார்க்கண்டே கவுடா, கே.எஸ்.ரங்கநாதாச்சாரி ஆகிய இருவரும்;
முல்பாகல் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் ஆர்.அமர்நாராயணப்பா, வி.ரகுபதி ரெட்டி, எம்.சி.சர்வஞ்ஞகவுடா ஆகிய மூவரும்; சீனிவாசப்பூர் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் ஏ.சி.நாகரத்னா, வி.எஸ்.சசிகுமார், வி.சுரேஷ் ரெட்டி ஆகிய மூவரும்;
சிந்தாமணி தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் சந்திரா ரெட்டி, என்.நாகிரெட்டி, எம்.சீனிவாசப்பா, என்.எம்.சுப்பாரெட்டி ஆகிய நால்வரும்;
சிக்கபல்லாபூர் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் ஏ.வி.அக்கலரெட்டி, எம்.என்.கிருஷ்ணமூர்த்தி, கே.ெஹச்.திம்மேகவுடா, வி.என்.முனே கவுடா, என்.மஞ்சுநாத் ஆகிய ஐந்து பேரும்; குடிபண்டே தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் கே.ஜி.ஆனந்த ரெட்டி, ெஹச்.என்.மஞ்சுநாத் ரெட்டி ஆகிய இருவரும்;
கவுரிபிதனுார் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் லட்சுமி நாராயணா, சி.ெஹச்.லட்சுமணா, வெங்கட ரமண ரெட்டி, ஹனுமந்த ரெட்டி ஆகிய நான்கு பேரும்; சேலுார் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் கே.வி.பாஸ்கர் ரெட்டி, வி.முத்திரெட்டி, வி.என்.மஞ்சுநாத் ரெட்டி, பி.சேகர் ஆகிய நான்கு பேரும்;
தாலுகா விவசாய விளை பொருள் சந்தை படுத்துதல் கூட்டுறவு சங்கத்தில் பிரவீன் குமார், கொத்துார் மஞ்சுநாத் ஆகிய இருவரும்; கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கோவர்த்தன ரெட்டி, ெஹச்.வி.வினோத்குமார், கே.சிவானந்த், வி.சுரேஷ் ஆகிய நான்கு பேரும்,
சிக்கபல்லாபூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கே.குடியப்பா, எஸ்.என்.சின்னப்பா, கே.எஸ்.தெய்வப்பா, பி.சி.நாகேஷ், ெஹச்.எஸ்.மோகன் ரெட்டி, எம்.ராமையா, எஸ்.வி.சுப்பாரெட்டி ஆகிய ஏழு பேரும்; பிற வங்கிகளின் கூட்டுறவு சங்கத்தில் பைலஹள்ளி எம்.கோவிந்த கவுடா, எஸ்.ஆர்.முரளிகவுடா, மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடாவின் ஆதரவாளர் பி.ஆர்.சீனிவாஸ் ஆகிய மூவரும் தேர்தல் களத்தில் உள்ளனர் என்று மாவட்ட உதவி கலெக்டர் மைத்ரி தெரிவித்தார்.
சில கூட்டுறவு சங்கங்களில் கூடுவிட்டு கூடு பாயும் நிலை தோன்றும் என்பதால், அத்தகையோரை சொகுசு சுற்றுலாவுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்துள்ளனர். மாலுார் எம்.எல்.ஏ., நஞ்சேகவுடா ஏற்பாட்டில் 'ஏசி' பஸ்சில் ஒரு பிரிவினர் சுற்றுலா சென்றுள்ளனர்.
இதனால், ஓட்டுப் போடுவோரை பிடிக்க முடியவில்லை. பேரம் நடத்தவும் முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆயினும் சிலர் டிமிக்கி கொடுக்க கூடும் என்றும் தெரிகிறது.
வெற்றி வியூகம்
டி.ஏ.பி.சி.எம்.எஸ்., சங்க இயக்குனர் பதவிக்கான போட்டியில் கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்துக்கும், தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒய்.சம்பங்கி மகன் பிரவீனுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பிரவீனுக்கு ஆதரவாக பா.ஜ., - ம.ஜ.த., இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு வியூகம் அமைத்துள்ளனர்.
மொத்தத்தில் கூட்டுறவு சங்க தேர்தல், மினி பொதுத்தேர்தலாக மாறி உள்ளது.