/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாமின் ரத்தான சூழலில் து.மு., உடன் வினய் ஆலோசனை
/
ஜாமின் ரத்தான சூழலில் து.மு., உடன் வினய் ஆலோசனை
ADDED : ஜூன் 08, 2025 04:04 AM

பெங்களூரு: ஜாமின் ரத்தான நிலையில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி, நேற்று துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ., கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரசின் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்தார். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்தார்.
ஜாமின் அளிக்கும் போதே, சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ முயற்சிக்க கூடாது. தார்வாடுக்கு செல்ல கூடாது என, நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாட்சிகளை கலைக்க முயன்றதாகவும் வினய்குல்கர்னியின் ஜாமினை ரத்து செய்யும்படியும் சி.பி.ஐ., அதிகாரிகள் கோரினர்.
இதை ஏற்று நேற்று முன் தினம் அவரது ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டுள்ளது.
இதனால் வினய் குல்கர்னி, துணை முதல்வர் சிவகுமாரை சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று காலையில் சந்தித்தார்.
தன் ஜாமின் ரத்தானது குறித்து, சிவகுமாரிடம் விவரித்து ஆலோசனை கேட்டார். இவர்கள் மூத்த வக்கீல் கபில் சிபிலிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். பின் வினய் குல்கர்னி அளித்த பேட்டி:
என் ஜாமின் ரத்தானதன் பின்னணியில், யாருடைய கைவரிசை உள்ளது என்பது தெரியும். நீதிமன்றத்துக்கு சாட்சிகள் வேண்டும். சாட்சிகளின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவு செய்யும்.
பலரும் என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப விரும்புகின்றனர். கடவுள் இருக்கிறார். அடுத்தகட்ட சட்ட போராட்டம் பற்றி, நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.