கார்களின் சராசரி விற்பனை விலை 5 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு
கார்களின் சராசரி விற்பனை விலை 5 ஆண்டுகளில் 50% அதிகரிப்பு
ADDED : ஜன 26, 2024 02:16 AM

புதுடில்லி: நாட்டில், கார்களின் சராசரி விற்பனை விலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து, துறை சார்ந்த நபர்களால் தெரிவிக்கப்பட்டதாவது: கடந்த 2018-19ல், கார்களின் சராசரி விற்பனை விலை 7.65 லட்சம் ரூபாயாக இருந்தது. இது நடப்பு 2023-24ம் ஆண்டில், 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து, 11.50 லட்சம் ரூபாயாக உள்ளது.
சொகுசு வசதிகளை நோக்கிய வாடிக்கையாளர்களின் தேர்வுகள், மாறி வரும் ஒழுங்குமுறை விதிமுறைகள் மற்றும் எஸ்.யு.வி., வகை கார்களின் மீதான மோகம் ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களில் அதிகப்படியான வசதிகளை விரும்புகின்றனர். அதிக வசதிகளை கொண்ட 'டாப் எண்டு' வகை மாடலையே அவர்கள் தேர்வு செய்கின்றனர்.
உதாரணத்துக்கு, ஏசி வசதி இல்லாத கார்களை தற்போது யாரும் வாங்குவதில்லை. ஆனால் முன்பு ஒரு காலகட்டத்தில் அதற்கான சந்தை தேவை இருந்தது.
அதேபோல் வாகன வகையை தேர்வு செய்வதிலும், பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'ஹேட்ச்பேக்' வாகனங்களை காட்டிலும், எஸ்.யு.வி., வாகனங்களையே மக்கள் தற்போது வாங்க விரும்புகின்றனர். இதன் விளைவாக, வாகன விலையும் அதிகரித்துள்ளது.
பணவீக்கம், அதிக மூலப்பொருள் விலைகள், பிராண்டு வலிமை, அதிக பாதுகாப்பு மற்றும் உமிழ்வு தரநிலைகளை நோக்கிய முயற்சிகள் ஆகியவை செலவினங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

