சந்தையில் நான்கில் ஒரு பங்கை கைப்பற்றிய 'பாரத்' கடலை பருப்பு
சந்தையில் நான்கில் ஒரு பங்கை கைப்பற்றிய 'பாரத்' கடலை பருப்பு
ADDED : ஜன 11, 2024 01:16 AM

புதுடில்லி:'பாரத்' பிராண்டின் கீழ், 'சன்னா தால்' எனும் கொண்டைக்கடலை பருப்பு விற்பனை, சந்தையில் --4ல் 1 பங்குடன், மிகப்பெரிய விற்பனை உயர்வை கண்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துஉள்ளது.
பாரத் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும் கடலை பருப்பு, மலிவு விலை காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களிலேயே, சந்தையில் நான்கில் ஒரு பங்கை பிடித்துஉள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் பிராண்டின் கீழ், கிலோ 60 ரூபாய்க்கு கடலை பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பிராண்டுகளின் விலை, 1 கிலோ 80 ரூபாயாக உள்ளது.
அனைத்து பிராண்டுகளையும் சேர்த்து நாட்டின் மொத்த கடலை பருப்பு மாதாந்திர நுகர்வு 1.80 லட்சம் டன்களாக உள்ள நிலையில், நான்கில் ஒரு பங்காக, பாரத் கடலை பருப்பு நுகர்வு உள்ளது.
கடந்த அக்டோபரிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 2.28 லட்சம் டன் பாரத் கடலை பருப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாத சராசரி விற்பனை 45,000 டன்னாக உள்ளது. அறிமுகப்படுத்தியபோது, 100 சில்லரை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இது, தற்போது 13,000 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. இது, நாடு முழுதும் உள்ள 21 மாநிலங்களில் 139 நகரங்களை உள்ளடக்கியது.
இவ்வாறு அவர் கூறினார்.

