
எரிபொருள் விற்பனை அதானி - அம்பானி கூட்டு
முகேஷ் அம்பானியின் ஜியோ பி.பி., நிறுவனமும், கவுதம் அதானியின் அதானி டோட்டல் காஸ் நிறுவனமும் தங்களது சில்லரை விற்பனை நிலையங்களில், பரஸ்பரம் இரு நிறுவனங்களின் எரிபொருளை விற்பனை செய்ய கூட்டு சேர்ந்துள்ளன. பிரிட்டனின் பி.பி., எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, ஜியோ பி.பி., என்ற பெயரில் ரிலையன்ஸ் பெட்ரோல், டீசல் விற்பனை செய்கிறது. அதே போல, பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அதானி டோட்டல் காஸ் சி.என்.ஜி., எரிவாயு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுதும் ஜியோவுக்கு 1,972 விற்பனையகங்களும்; அதானிக்கு 650 விற்பனையகங்களும் உள்ளன.
பாக்ஸ்கான் முதலீடு தைவான் அரசு ஒப்புதல்
இந்தியா மற்றும் அமெரிக்காவில் 18,700 கோடி ரூபாய் முதலீடு செய்ய, பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு தைவான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 12,665 கோடி ரூபாய், இந்தியாவில் ஐபோன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் தயாரிக்க முதலீடு செய்யப்பட உள்ளது. சிங்கப்பூரில் உள்ள தன் துணை நிறுவனத்தின் வாயிலாக, பாக்ஸ்கான் இந்த முதலீட்டை மேற்கொள்ளஉள்ளது. மீதமுள்ள தொகை, அமெரிக்காவில் புராஜெக்ட் இ.டி.ஏ., என்ற புதிய நிறுவனத்தை துவங்க பயன்படுத்தப்பட உள்ளது.