ADDED : பிப் 29, 2024 11:38 PM

புதுடில்லி:இந்திய பொருளாதாரம், கடந்த டிசம்பர் காலாண்டில் 8.40 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என, என்.எஸ்.ஓ., என்னும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புக்கும் மேலாக, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய செப்டம்பர் காலாண்டில் பதிவாகியிருந்த 7.60 சதவீத வளர்ச்சியை விடவும் அதிகமாகும்.
இந்நிலையில், என்.எஸ்.ஓ., தனது இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.60 சதவீதமாக இருக்கக்கூடும் என்று கணித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட முதற்கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.30 சதவீதமாக இருக்கும் என்று என்.எஸ்.ஓ., கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க தயாரிப்புத் துறை, சுரங்கம், மற்றும் கட்டுமான துறைகளின் சிறப்பான செயல்பாடே காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டல் 6.50 சதவீதமாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.80 சதவீதமாக இருந்தது.
கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில், பொருளாதார வளர்ச்சி முன்பிருந்த 7.20 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர, நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கான மதிப்பீடுகளும் முறையே 8.20 சதவீதம் மற்றும் 8.10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது இதற்கு முன்பாக முறையே 7.80 சதவீதமாகவும்; 7.60 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் என கணிப்புகள் வெளியான நிலையில், ஆச்சரியப்படுத்தும் வகையில் 8.40 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது

