ADDED : ஜன 10, 2024 12:33 AM

சென்னை:தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் உணவு பதப்படுத்தும் தொழிலில், 7,082 கோடி ரூபாய்க்கும்; வேளாண் சார்ந்த தொழிலில், 4,878 கோடி ரூபாய்க்கும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுஉள்ளன.
தமிழக அரசு இம்மாதம் நடத்திய, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பெரிய தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணியை தொழில் துறை மேற்கொண்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், அத்துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட வாரியாக முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி, முதலீடுகளை ஈர்த்தனர்.
முதலீட்டாளர்கள் மாவட்டங்களிலேயே, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு நாளில், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையில் திரட்டிய முதலீட்டு விபரங்களை அமைச்சர் அன்பரசன், முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதன்படி, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையில், 5,068 தொழில் நிறுவனங்கள் வாயிலாக, 63,573 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 2.51 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.
உணவு பதப்படுத்தும் தொழிலில், 586 நிறுவனங்கள் வாயிலாக, 7,082 கோடி ரூபாயும்; வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிக்கும், 375 நிறுவனங்கள் வாயிலாக, 4,878 கோடி ரூபாயும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இரண்டு தொழில்களிலும் சேர்த்து, 11,960 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
ஜவுளி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் வாயிலாக, 7,871 கோடி ரூபாயும்; இன்ஜினியரிங் தொழிலில், 4,897 கோடி ரூபாயும்; ரப்பர், பிளாஸ்டிக் சார்ந்த தொழில்கள் வாயிலாக, 4,146 கோடி ரூபாயும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

