செப். 22 முதல் ஜி.எஸ்.டி., குறைப்பால் மின் கொள்முதல் செலவு குறைகிறது
செப். 22 முதல் ஜி.எஸ்.டி., குறைப்பால் மின் கொள்முதல் செலவு குறைகிறது
ADDED : செப் 19, 2025 01:26 AM

சென்னை,:சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின் திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி 5 சதவீதமாக குறைக்கப்படுவதால், ஒரு மெகா வாட் சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான செலவில், 25 லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்பட உள்ளது. இதனால் மின் வாரியத்தின் மின் கொள்முதல் செலவும் குறையும்.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் பசுமை மின் திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது. இதனால், சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான செலவு குறைகிறது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., வரி விகிதங்கள், இரு அடுக்குகளாக மறுசீரமைக்கப்பட்டு உள்ளன. இவை வரும், 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. பசுமை மின் திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 12 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது, மின் நிலையங்கள் அமைப்பதற்கான செலவை குறைக்கும்.
அதன்படி, தற்போது, ஒரு மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 3.50 - 4 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி மறுசீரமைப்பால், ஒரு மெகா வாட் மின் நிலையம் அமைக்க, 20 லட்சம் முதல், 25 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
பெரிய அளவில், 500 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின்சார பூங்கா அமைக்கும் செலவில், 100 கோடி ரூபாய் வரை செலவு குறையும். மின் நிலையங்களின் முதலீட்டு செலவை பொறுத்து, மின்சார கொள்முதல் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே, முதலீடு குறைவதால், மின் வாரியத்தின் மின் கொள்முதல் செலவும் குறையும்.
வீடுகளில், 3 கிலோ வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான செலவு, 9,000 - 10,500 ரூபாய் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.