ரஷ்யா போரால் இந்திய தோல் பொருள் ஏற்றுமதி ரூ.23,300 கோடியாக சரிவு
ரஷ்யா போரால் இந்திய தோல் பொருள் ஏற்றுமதி ரூ.23,300 கோடியாக சரிவு
ADDED : ஜன 26, 2024 02:11 AM

சென்னை:''ரஷ்யா - உக்ரைன் போரால், நடப்பு நிதியாண்டில் கடந்த அக்., வரை, இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி, 23,323 கோடி ரூபாயாக குறைந்துள்ளது; இது முந்தைய ஆண்டைவிட 13 சதவீதம் குறைவாகும்,'' என, இந்திய தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.ஆர்.விஜயன் தெரிவித்தார்.
ஐ.எப்.எல்.எம்.இ.ஏ., எனப்படும் இந்திய தோல் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம், சென்னையில், நடந்தது.
நான்காவது இடம்
அதில், விஜயன் கூறியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, தோல், தோல் பொருட்கள், காலணி துறைகளின் பங்கு முக்கிய இடத்தில் உள்ளது. உலகளவில், தோல் பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு, 13 சதவீமாகும்.
உலகில், தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. தோல் தொழில் துறை, 44.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. அதில் 40 சதவீதம் பேர் பெண்கள்.
இந்திய தோல் தொழில் துறை சுற்றுச்சூழலின் மீது கொண்ட அக்கறையால், பல்வேறு அம்சங்களில் முதலீடு செய்து வருகிறது.
குறிப்பாக, கழிவுநீர் வெளியாகாமல் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுவது, கழிவுநீரை சுத்திகரிக்க பசுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்படுகிறது.
குறைவு
கடந்த, 2021 - 22ல், 40,421 கோடி ரூபாயாக இருந்த தோல் பொருட்கள் ஏற்றுமதி, 2022 - 23ல், 43,658 கோடி ரூபாயாக உயர்ந்தது.
நடப்பு நிதியாண்டில் அக்., வரை ஏற்றுமதி, 23,323 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட, 13 சதவீதம் குறைவு.
ரஷ்யா - உக்ரைன் மற்றும் பாலஸ்தீனம் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் பல நாடுகளின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஏற்றுமதி குறைந்துள்ளது.
இந்திய தோல் பொருட்களுக்கு சந்தையாக உள்ள பல நாடுகளின் கையிருப்பில் இருந்த பொருட்கள் விற்றுவிட்டதால், அடுத்த ஆண்டில் ஏற்றுமதி, 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு, இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். கூட்டத்தில், பங்கேற்கும் வெளிநாட்டினர் வந்து, செல்லும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இந்திய சர்வதேச தோல் பொருட்கள் கண்காட்சி பிப்., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை நடக்கிறது.
அதில், உள்நாடு, வெளிநாட்டை சேர்ந்த, 400 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதை முன்னிட்டு, 1ம் தேதி, கிண்டியில், 'பேஷன் ஷோ' நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

