ADDED : ஜன 27, 2024 02:10 AM

சென்னை:தமிழக மின் தேவையை பூர்த்தி செய்யும் பணியை, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் மேற்கொள்கிறது. இது, அடுத்த நாள் மின் தேவை எவ்வளவு இருக்கும் என்பதை முந்தைய நாளே மதிப்பீடு செய்து, அதை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
அதன்படி, காற்றாலை, சூரியசக்தி, எரிவாயு, சர்க்கரை ஆலை இணை மின் நிலையம், கரும்பு சக்கையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள், அடுத்த 24 மணி நேரத்தில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்பதை, 96 பகுதிகளாக பிரித்து, மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு, முந்தைய நாளே தெரிவிக்க வேண்டும்.
அதிக மின்சாரம் தருவதாக தெரிவித்து விட்டு குறைவாக வழங்கினால், மின் தேவையை பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படுவதுடன், மின் வழித்தடங்களில் பாதிப்பும் ஏற்படும்.
எனவே, காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் அல்லாத, மற்ற வகை மின் உற்பத்தி நிறுவனங்கள், முன்கூட்டியே தெரிவித்த மின்சாரத்தை விட குறைத்து வழங்கினால், ஏப்., 1 முதல் அபராதம் விதிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

