அரிய காந்தங்கள், கனிமங்கள் தடையின்றி கிடைக்க 'குவாட்' கூட்டு
அரிய காந்தங்கள், கனிமங்கள் தடையின்றி கிடைக்க 'குவாட்' கூட்டு
ADDED : ஜூலை 03, 2025 12:29 AM

வாஷிங்டன்:அரிய காந்தங்கள், தாது பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய புதிய நடவடிக்கையை 'குவாட்' அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.
மின்சார வாகனங்கள் உட்பட, பல்வேறு தயாரிப்புகளில் முக்கிய தேவையான அரிய காந்தங்கள், தாது பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் வாயிலாக, அவற்றின் விலையை அதிகரித்து ஏகபோகத்துக்கு திட்டமிடுவதாக, பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், வாஷிங்டனில் நடந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளை கொண்ட 'குவாட்' அமைப்பின் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 'குவாட் கிரிட்டிகல் மினரல்ஸ் இனிஷியேடிவ்' என்ற பெயரில், அரிய காந்தங்கள், தாது பொருட்கள் வினியோக தொடரை பரவலாக்கவும், சந்தையில் தடையின்றி கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
அரிய காந்தங்களின் வினியோக தொடரில் திடீர் கட்டுப்பாடு, தடை ஏற்படுத்தப்படுவது குறித்து குவாட் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற முக்கிய பொருட்களுக்கு ஒரு நாட்டை நம்பியிருப்பது, பொருளாதார மிரட்டல், தாறுமாறான விலை நிர்ணயம், வினியோக தொடர் தடைகள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனவே, குவாட் அமைப்பு நாடுகள் இடையே, இதுகுறித்த ஒத்துழைப்பை அதிகரிக்ககூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் மார்கோ ருபியோ, ஆஸ்திரேலியாவின் பென்னி வாங், ஜப்பானின் டகேஷி இவாயா ஆகியோர் பங்கேற்றனர்.