பங்கு சந்தை நிலவரம் : உயர்வில் துவங்கி சரிவில் நிறைவு
பங்கு சந்தை நிலவரம் : உயர்வில் துவங்கி சரிவில் நிறைவு
ADDED : செப் 02, 2025 11:44 PM

உயர்வில் துவங்கி சரிவில் நிறைவு
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் முடிவடைந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தயாரிப்புத்துறை வளர்ச்சி 17 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு, முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.80% ஆக பதிவான காரணங்களால், நேற்று முன்தினத்தின் தொடர்ச்சியாக, வர்த்தகம் ஆரம்பித்த போது சந்தைகள் உயர்வுடன் துவங்கின.
பிற்பகல் 2 மணி வரை, நிப்டி, சென்செக்ஸ் கணிசமாக உயர்வுடன் வர்த்தகமாகின. இன்றும், நாளையும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுவதை முன்னிட்டு, வர்த்தகம் முடியவிருந்த இருந்த கடைசி ஒரு மணி நேரத்தில், விலை உயர்ந்திருந்த வங்கி, வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்று லாபத்தை முதலீட்டாளர்கள் பெற்றனர். இதனால், சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவுசெய்தன.
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைளுக்கு விடுமுறை. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி உயர்வுடனும்; சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹேங்சேங் சரிவுடனும் முடிவடைந்தன. பெரும்பாலான ஐரோப்பிய சந்தைகள்
இறக்கத்துடன் வர்த்தகமாகின.
சரிவுக்கு காரணங்கள்
1 ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் தொடர்பான முன்னெச்சரிக்கை
2வங்கி, வாகனத்துறை பங்குகளை லாபத்துக்கு அதிகம் விற்றது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 1,159 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.72 சதவீதம் அதிகரித்து, 69.36அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 5 பைசா குறைந்து, 88.15ரூபாயாக இருந்தது.