ADDED : பிப் 29, 2024 11:20 PM

சென்னை:'தமிழகத்தில் இருந்து நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை, 61,171 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது' என, தமிழக அரசின் தொழில் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை விடுத்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக தொடர்ந்து விளங்குகிறது.
நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் ஜன., வரை, 61,171 கோடி ரூபாய்க்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்களில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 1.87 லட்சம் கோடி ரூபாய் எனும் போது, தமிழகத்தின் ஏற்றுமதி பங்கு 32.52 சதவீதம்.
கடந்த 2022 - 23 நிதியாண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 44,571 கோடி ரூபாய். அதனுடன் ஒப்பிடும் போது, நடப்பு நிதியாண்டில், 10 மாதத்திற்கு உள்ளாகவே 61,171 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முழு நிதியாண்டில், 74,700 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைநோக்கு பார்வை உடைய தலைமைத்துவம், உற்பத்தி மற்றும் துல்லிய பொறியியலில் சிறந்து விளங்குதல், உயர்தர தொழில்நுட்பங்களை கையாளுதல் போன்ற சிறப்பு அம்சங்களால், தமிழகம் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

