ஸ்டார்ட்அப் தொழில்நுட்பம் அறிய ஜெர்மனிக்கு தமிழக குழு பயணம்
ஸ்டார்ட்அப் தொழில்நுட்பம் அறிய ஜெர்மனிக்கு தமிழக குழு பயணம்
ADDED : ஜூன் 11, 2025 12:19 AM

சென்னை:பிரான்ஸ் நாட்டில் இன்று முதல், வரும் 15ம் தேதி வரை, 'விவா டெக்னாலஜி' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான உலக மாநாடு நடக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், ஸ்டார்ட்அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பத்து ஸ்டார்ட்அப் நிறுவன பிரதிநிதிகள், நேற்று பிரான்சுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதன் வாயிலாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு, தொழில் வாய்ப்பு உள்ளிட்டவை கிடைக்கும்.
மேலும், மாநாட்டிற்கு வரும் பல்வேறு நாடுகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, கோவையில் வரும் அக்டோபரில் தமிழக அரசு நடத்தும் ஸ்டார்ட்அப் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
பின், 15ம் தேதி ஜெர்மனிக்கு செல்லும் தமிழக குழு, அங்குள்ள புத்தாக்க ஆய்வகங்களுக்கு செல்கிறது. ஸ்டார்ட் அப், சிறு தொழில்களில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து வந்து, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்பட உள்ளன.