'அமெரிக்காவின் 25 சதவிகிதம் வரி நவம்பரில் விலக்கப்பட்டுவிடும்'
'அமெரிக்காவின் 25 சதவிகிதம் வரி நவம்பரில் விலக்கப்பட்டுவிடும்'
ADDED : செப் 19, 2025 01:30 AM

கொல்கத்தா:நம்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி, வரும் நவம்பர் மாதத்துக்குள் விலக்கிக் கொள்ளப்படலாம் என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
கொல்கட்டாவில், வணிகர்கள், தொழில் துறையினர் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அமெரிக்கா விதித்துள்ள வரியை எதிர்கொள்வது தொடர்பான பணியில் அனைவரும் ஈடுபட்டுள்ளோம். வரிக்கு பதில் வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியும், அபராத வரியாக விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியும் நாம் எதிர்பாராதவை.
எனினும், புவி அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து, கூடுதல் வரி 25 சதவீதம் விலக்கிக் கொள்ளப்படும் என நம்புகிறேன். கடந்த ஓரிரு வாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், இது நவம்பர் மாதத்துக்குள் நடக்க வாய்ப்புள்ளது. இதைக்கூற குறிப்பிட்ட காரணம் ஏதும் இல்லாத நிலையில், இது நம்பிக்கை மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.