ADDED : ஜன 28, 2024 09:18 AM
இந்தியாவின் மின் உபயோகம், ஆண்டு அளவீட்டில், எட்டு சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்ற செய்தி திங்களன்று வெளியானது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மின்னணு தயாரிப்புகளின் ஏற்றுமதி, 22 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது என்ற செய்தியும் அன்று வெளியானது
அன்னிய முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை விற்ற காரணத்தினால், செவ்வாயன்று சந்தை பெரிய அளவிலான சரிவை சந்தித்தது
எச்.எஸ்.பி.சி., கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டின் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் தொழில்களின் நடவடிக்கை, கடந்த நான்கு மாதத்தில் இருந்ததை விட அதிகமாக இருந்தது என்ற தகவல் வியாழனன்று வெளியானது.
வரும் வாரம்
கட்டுமானங்கள் வேலை அளவு, இடைக்கால பட்ஜட், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் மற்றும் நிகழ்வுகள் வரும் வாரத்தில் வெளிவர உள்ளன
எஸ் அண்டு பி., -ஷில்லர் வீட்டு விலைகள், ஜே.ஓ.எல்.டி., வேலை வாய்ப்புகள், பெடரல் ரிசர்வ் வட்டிவிகித முடிவுகள், ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக் குறியீடு, வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் செவ்வாயன்று வர்த்தக நாளின் இறுதியில் 21750 என்ற நிலையை எட்டிய நிப்டி குறியீடு, நாளின் இறுதியில் 333 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. புதனன்று 215 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 101 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
இந்த அளவிற்கான ஏற்ற இறக்கங்களுடன் தொடர்ந்து செயல்படுவதால், இனி முழுக்க முழுக்க செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையின் போக்கில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான சூழல் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது
இது போன்ற சூழ்நிலைகளில் டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தியடையாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை வர்த்தகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நிப்டியில் டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் ஏறுவதற்கு சற்று தயங்கும் சூழல் தென்படுவதால், வியாபாரத்தின் அளவை குறைத்தும்; ஸ்டாப் லாஸ்களை மிகவும் அருகில் வைத்துக்கொண்டும் அதனை அடிக்கடி மாற்றம் செய்யாமலும் செயல்படுவதே, வர்த்தகர்களுக்கான சிறந்த உத்தியாக இருக்கும்.
மூன்றே வர்த்தக நாட்களை கொண்டிருந்த கடந்த வாரத்தின் இறுதியில், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் பார்க்கும்போது, நிப்டியில் ஏறுவதற்கு தயக்கம் உருவான சூழல் இருப்பதைப் போன்ற நிலைமை இருக்கின்றது.
வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப் லாஸ்களை வைத்துக்கொண்டும், லாபம் வந்தால் உடனுக்குடன் அதனை வெளியே எடுத்துக்கொள்ளும் வகையிலான வர்த்தக திட்டங்களுடன் மட்டுமே செயல்படுவது குறித்து பரிசீலனை செய்வது நல்லது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 21,050, 20,774 மற்றும் 20,529 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 21,692, 22,058 மற்றும் 22,304 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 21,416 என்ற அளவிற்கு மேலே சென்று, அதிக அளவில் தொடர்ந்து வர்த்தகமாக வேண்டும்.