புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்டில் 18 சதவீதம் குறைந்தது
புதிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கை ஆகஸ்டில் 18 சதவீதம் குறைந்தது
ADDED : செப் 16, 2025 12:14 AM

புதுடில்லி : பங்குச் சந்தையில் புதிதாக இணையும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், ஆகஸ்டில் 18.30 சதவீதம் சரிந்து உள்ளதாக, தேசிய பங்குச் சந்தை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
என்.எஸ்.இ.,யில் கடந்த ஆகஸ்டில் 12.30 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்து உள்ளனர். நடப்பு நிதியாண்டில், மூன்றாவது குறைந்தபட்ச எண்ணிக்கை இதுவாகும். ஆக.,31 நிலவரப்படி, ஒட்டுமொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 11.90 கோடியாக அதிகரித்து உள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான அதிர்ச்சி, அதன் தொடர்ச்சியாக உலகளாவிய பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற சூழல் காரணமாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை, சமீப மாதங்களாக முதலீட்டாளர்களை கவலை அடைய செய்துள்ளது.
நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்து, மே, ஜூலை மாதங்களை தவிர்த்து, முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, இறங்குமுகமாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் இது தொடர்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்.,முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், மாதத்துக்கு சராசரியாக 11.90 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் இணைந்து உள்ளனர். கடந்தாண்டு இதே காலத்தில், 19.20 லட்சம் பேர் இணைந்திருந்தனர்.

