போரக்ஸ் :வர்த்தக பேச்சு ரூபாய்க்கு சிறிய ஆறுதலை தரலாம்
போரக்ஸ் :வர்த்தக பேச்சு ரூபாய்க்கு சிறிய ஆறுதலை தரலாம்
UPDATED : செப் 13, 2025 12:18 AM
ADDED : செப் 13, 2025 12:06 AM

சமீபத்தில் புதிய உச்சத்தை எட்டிய இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, டாலருக்கு எதிராக ஒரு நிலையற்ற வாரத்தை முடித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தகத் தடைகள், தொடர்ந்து வெளியேறும் அன்னிய முதலீடுகள் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு பற்றிய எதிர்பார்ப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் உள்ளது. இந்த எதிர்மறை சக்திகள் காரணமாக, வரும் வாரத்தில் ரூபாயின் போக்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க மத்திய வங்கியின் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக, டாலர் குறியீடு, அழுத்தத்தில் இருந்தது.
அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்கத் தரவு சற்று அதிகரித்திருந்தாலும், ஆண்டு பணவீக்கம் 2.90 சதவீதமாக உயர்ந்துள்ளது. சந்தையின் கவனம் விரைவாக அமெரிக்காவின் பலவீனமான தொழிலாளர் சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில், முதல் முறையாக வேலையின்மைக்கான உதவித்தொகை கோரியவர்களின் எண்ணிக்கை 27,000 அதிகரித்து 2,63,000 ஆக உயர்ந்துள்ளது.
இது, அக்டோபர் 2021க்கு பின் இல்லாத அளவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த பலவீனமான தொழிலாளர் சந்தை தரவு, அடுத்த வாரக் கூட்டத்தில், மத்திய வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் குறைக்கும் என்ற நம்பிக்கையை சந்தைகளில் வலுப்படுத்தியுள்ளது.
சி.எம்.இ., பெட்வாட்ச் கணிப்புப்படி, 25 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி குறைப்புக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 92 சதவீதமாகவும், 50 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கான வாய்ப்பு 7 சதவீதமாகவும் உள்ளது.
யூரோவின் தாக்கம் ஐரோப்பிய மத்திய வங்கி, வட்டி விகிதத்தை, 2.15 சதவீதத்தில் மாற்றாமல் வைத்ததுடன், பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் குறித்த நம்பிக்கையான கண்ணோட்டத்தை வெளியிட்டது. இது யூரோவுக்கு சில ஆதரவைக் கொடுத்தது. அமெரிக்க டாலர் குறியீட்டின் 58 சதவீத கணக்கீட்டில் யூரோ இருப்பதால், யூரோவின் சிறிய நகர்வு கூட, டாலர் குறியீட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் நம்பிக்கையான கண்ணோட்டத்தால் யூரோவின் மதிப்பு உயர்கிறது; டாலர் பலவீனமடைகிறது; வளர்ந்து வரும் நாடுகளின் நாணயங்கள் வலுவடைகின்றன. ரூபாயைப் பொறுத்தவரை, உள்நாட்டு வர்த்தக அழுத்தங்கள் தொடர்ந்தாலும், வெளிப்புற காரணிகள் சாதகமாக அமைந்து உள்ளன.
ரூபாயின் நிலை ரூபாய் மதிப்பு 88.45 என்ற புதிய குறைந்தபட்ச மதிப்பை பெற்ற நிலையில், அதற்கான குறுகிய கால வரம்பு 87.90 மற்றும் 88.60-க்கு இடையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனமான டாலர் மற்றும் அமெரிக்கா-வுடனான வர்த்தக பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்படலாம் என்ற நம்பிக்கைகள், வரும் நாட்களில், ரூபாய்க்கு சிறிது ஆறுதலை அளிக்கலாம்.

