/
செய்திகள்
/
வர்த்தகம்
/
ஆயிரம் சந்தேகங்கள்
/
ஆயிரம் சந்தேகங்கள் :வைப்பு நிதிக்கான வட்டி குறைந்துவிடுமே என்ன செய்வது?
/
ஆயிரம் சந்தேகங்கள் :வைப்பு நிதிக்கான வட்டி குறைந்துவிடுமே என்ன செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் :வைப்பு நிதிக்கான வட்டி குறைந்துவிடுமே என்ன செய்வது?
ஆயிரம் சந்தேகங்கள் :வைப்பு நிதிக்கான வட்டி குறைந்துவிடுமே என்ன செய்வது?
ADDED : ஜூன் 09, 2025 01:10 AM

மியூச்சுவல் பண்டு லாபத்தை அவ்வப்போது எடுப்பதால் முதலீடு குறைகிறது. தவிர்ப்பது எப்படி?
எஸ்.வெண்மதி,
மயிலாப்பூர்.
முதலீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய்; அது ஈட்டியிருக்கும் லாபம், 3 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். அதாவது 10 லட்சம், 13 லட்சமாக வளர்ந்திருக்கிறது. இந்த 3 லட்சத்துக்கு உண்டான யூனிட்டுகளை மட்டும், 'ரிடீம்' செய்தால், அது லாபத்தை அறுவடை செய்வதாகக் கருதப்படும். அங்கே, முதலீட்டுத் தொகை குறையாது. இதற்கு 'பார்ஷியல் ரிடம்ஷன்' என்று பெயர்.
இன்னொரு முறை உள்ளது. அது, 'சிஸ்டமேடிக் வித்டிராயல்' திட்டம். இதில் மாதாமாதமோ, காலாண்டுக்கு ஒருமுறையோ, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம். அதில் லாபத்தை மட்டும் எடுத்துக்கொள்வதற்கு ஏற்ப எழுதிக் கொடுக்கலாம்.
ஒரு வங்கியில் மூன்று மியூச்சுவல் பண்டு திட்டங்களில், 12 மாதங்களுக்கு தலா 2,000 ரூபாய் எஸ்.ஐ.பி., போட்டு வந்தேன். வங்கி கணக்கில் இருந்தே கழித்துக் கொள்ளும் விதமாக இ.சி.எஸ்., கொடுத்திருந்தேன். எஸ்.ஐ.பி.,க்கு ஏற்ப, என் வங்கிக் கணக்கில் போதிய பணம் வைத்திருந்தேன். 12 மாதங்களுக்குப் பின்னர் மினிமம் பேலன்ஸ் மட்டும் வைத்தேன். இதற்கு நடுவே, எஸ்.ஐ.பி., கட்டுவதற்குப் போதுமான பணம் வைத்திருக்கவில்லை என்று 295 ரூபாய் பிடித்துவிட்டனர். இதேபோல் இரண்டு முறை பிடித்து விட்டனர். வங்கிக்கு இ-மெயில் அனுப்பினேன். பதில் இல்லை. இந்தப் பணத்தை எப்படி நான் திரும்பப் பெறுவது?
டி.நாராயணன், சென்னை.
மியூச்சுவல் பண்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான படிவத்தை ஆரம்பத்தில் நிரப்பிக் கொடுத்தபோது, எஸ்.ஐ.பி.,க்கான கால வரையறை 12 மாதங்கள் தான் என்று குறிப்பிட்டீர்களா என்று, ஆவணங்களை சரிபாருங்கள்.
அப்படி எழுதிக் கொடுத்திருந்தீர்கள் என்றால், உங்கள் மீது பிழையில்லை. எஸ்.ஐ.பி.,யை நிறுத்தாதது வங்கியின் தவறு. உங்களிடம் அபராதம் வசூலிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. இந்த விபரத்தைச் சரிபார்த்துக்கொண்டு, மீண்டும் வங்கியை அணுகுங்கள்.
உங்கள் விஷயத்தில் வங்கிக்குப் போவது அவசியம். எழுத்துப்பூர்வமாக, 'ஸ்டாப் எஸ்.ஐ.பி.' கொடுப்பது முக்கியம். அல்லது அதற்கான படிவத்தை நிரப்பிக் கொடுங்கள். இல்லையெனில், இரண்டு பிரச்னைகள். மீண்டும் அடுத்த மாதமும் அபராதம் பிடிப்பர்.
நீங்கள் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றவில்லை, உரிய தேதியில் இ.சி.எஸ்., முறையில் பணம் எடுப்பதற்கு ஏற்ப இருப்புத் தொகை வைத்திருக்கவில்லை என்று கிரெடிட் ஸ்கோர் வேறு அடிவாங்கும்.
ரெப்போ விகிதம் அரை சதவீதம் குறைந்துவிட்டது. வங்கியின் வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைந்துவிடுமே? என்ன செய்வது?
ஏ.மனோகர், வாட்ஸாப்.
இந்த அரை சதவீதத்தின் தாக்கம், வங்கி வைப்புநிதி வட்டி விகிதங்களில் தெரிவதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆகலாம். அதற்குள் முடிந்தவரை, நீண்டகால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, உயர் வட்டியின் பலனை அனுபவிக்கலாம். அஞ்சலகம் இன்னொரு நல்ல வாய்ப்பு.
காலாண்டுக்கு ஒருமுறை தான் வட்டி விகிதங்கள் அங்கே மாற்றியமைக்கப்படும். ஜூலை டு செம்டம்பர் காலாண்டின் துவக்கத்தில் தான் வட்டி விகிதம் மாறும். அதற்கு முன்னதாக அங்கே முதலீடு செய்யலாம்.
படித்தவர்கள் மட்டுமே அறிந்து ஈடுபடும் முதலீடுகளான பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், பத்திரங்கள் போன்றவற்றை கிராமத்தவரும் அறிய என்ன செய்யலாம்?
அ.யாழினிபர்வதம், சென்னை.
என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் இந்த 'ஆயிரம் சந்தேகங்கள்' பகுதிக்கு வரும் கேள்விகளில் பல, மெய்நிகர் நாணயங்களை பற்றியும், என்.எப்.டி., என்று குறிப்பிடப்படும் 'நான் பங்கிபிள் டோக்கன்' டிஜிட்டல் சேகரிப்புகள் பற்றியும் இருக்கின்றன.
அதாவது, வழக்கமான பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், கடன் பத்திரங்களை எல்லாம் தாண்டி, மிக மிக ரிஸ்க்கான முதலீடுகளில் நம் சிற்றூர், கிராம மக்கள் இறங்கியுள்ளனர்.
முதலீடு செய்வதில், படித்தவர், படிக்காதவர் என்ற பேதமெல்லாம் இல்லை என்பதையே இந்த கேள்விகள் எனக்கு உணர்த்துகின்றன. தேவையும், அவசியமும் உள்ளவர்கள், புதிய முதலீட்டு முறைகளைத் தாங்களாகவே முட்டி மோதிக் கற்றுக்கொள்கின்றனர் என்பது தான் உண்மை.
வெளிநாட்டு அரசு ஒன்றுக்கு ஒப்பந்தம் மூலம் சில பொருட்களை நான் ஏற்றுமதி செய்தேன். துவக்க காலத்தில் இந்தியாவில் உள்ள அந்த நாட்டு துாதரகம் வாயிலாக, வங்கி மூலம் அதற்கென தொகை பெற்று வந்தேன். இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளாக பணம் தரவில்லை. அதை எப்படி பெறுவது? பணம் கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பதில் தருகின்றனர்.
ஏ.அஜ்மல்கான் ஹவுத்,
சென்னை.
எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் தான் கையில் இருக்கிறதே, அப்புறம் ஏன் தயங்குகிறீர்கள்? நல்லதொரு வழக்கறிஞரை நாடுங்கள். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார்.
வங்கியில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் பணம் பிடிக்கின்றனர், என்ன செய்வது?
நந்தகுமார், ஈரோடு.
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வசதியை பல வங்கிகள் தருகின்றன. இதற்கு அடிப்படை சேமிப்பு கணக்கு என்றும் பெயர். அதுபோன்ற கணக்கு ஒன்றைத் துவங்குங்கள்.
அங்கே குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படாது. ஆனால், இத்தகைய சேமிப்புக் கணக்கில் ஒருசில கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஒரு மாதத்தில் இத்தனை பரிவர்த்தனை தான் இருக்க வேண்டும்; ஒருசில சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கும். பார்த்து, பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881