ADDED : டிச 05, 2025 12:30 AM

ரூபாய் மதிப்பு நேற்றும் வரலாறு காணாத அளவாக 90.42ஆக சரிந்தாலும், நிறைவில் மீட்சியடைந்து 89.89ஆக உயர்ந்தது.
ரூபாய் மதிப்பு 89.00-லிருந்து 90.00ஐ எட்ட வெறும் எட்டு வர்த்தக அமர்வுகள்தான் எடுத்துக்கொண்டது. தொடர்ந்து நான்கு நாட்களாக வீழ்ச்சியை சந்தித்ததால், அதன் பழைய நிலைகள் இனி பொருந்தாது என்பது தெளிவாகிறது.
வர்த்தக நேரத்தின் பெரும்பகுதி வரை, ரிசர்வ் வங்கியின் தலையீடு இல்லாததால், இறக்குமதியாளர்கள் டாலரை வாங்க விரைந்தனர். இது, யூக வணிகர்களுக்கு சந்தையில் வாய்ப்பை கொடுத்தது.
ரூபாய் மதிப்பு சரியும் போது, அன்னிய முதலீட்டாளர்கள் நம் நாட்டில் முதலீடு செய்ய தயங்குவது வழக்கம். 2025ம் ஆண்டில் இதுவரை, அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் வாயிலாக, 70,976 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்ச்சி சிறப்பாக உள்ளது. இருப்பினும், நாணய சந்தை வெறும் வளர்ச்சி புள்ளிவிபரங்களை பொருட்படுத்தவில்லை. அது, நிலைத்தன்மை மற்றும் தெளிவான கொள்கை வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறது.
தற்போது முதலீட்டாளர்களின் கவனம், இன்று அறிவிக்கப்பட உள்ள ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை முடிவில் உள்ளது. வட்டி விகித முடிவுகளை தாண்டி, ரூபாயின் நிலை குறித்து ஆர்.பி.ஐ., கவர்னர் என்ன சொல்கிறார் என்பதை அனைவரும் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
அமெரிக்காவில் தனியார் வேலைவாய்ப்பு குறைந்தது, அடுத்த வாரம் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைப்பதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக சந்தை நம்புவதும், டாலர் மதிப்பு வலுவிழக்க காரணம்.
ரூபாய் மதிப்பு 90ஐ தாண்டி சரிந்ததால், அதன் மீதான அழுத்தம் குறையவில்லை. குறுகியகாலத்தில், ரூபாய் மதிப்பு 90.70-91.00 என்ற வரம்பை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.

