'நீட்' முறைகேடு குறித்து ராகுல் ஆவேசம் முறை தவறிய பேச்சு என அமைச்சர் பதிலடி
'நீட்' முறைகேடு குறித்து ராகுல் ஆவேசம் முறை தவறிய பேச்சு என அமைச்சர் பதிலடி
ADDED : ஜூலை 23, 2024 01:42 AM

''நம் நாட்டில், 'நீட்' தேர்வு மட்டுமின்றி அனைத்து தேர்வு முறையுமே மோசடியாக மாறி வருகிறது. இந்த தவறுக்கு பொறுப்பேற்காமல் மற்றவர்கள் மீது குறை கூறி வரும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, பிரச்னையின் தீவிரம் குறித்த அடிப்படை புரிதலே இல்லை. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர், ''தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை எதிர்க்கின்றன. இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை,'' என்றார்.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று லோக்சபா கூடியதும், முதல் அலுவலாக கேள்வி நேரம் துவங்கியது. அப்போது, தேனி தி.மு.க., -- எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், ''தேனியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்படுமென்ற செய்தி கடந்த ஆட்சியிலேயே இருந்தது. இன்னும் அதற்கான அறிகுறியே இல்லை. அந்த பள்ளியை அமைக்க அரசு முன்வருமா?'' என கேட்டார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, ''அதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் வரை, அறிவிப்பு எதையும் வெளியிட இயலாது,'' என்றார்.
ராஜினாமா செய்வாரா?
பின், விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசுகையில், ''கடந்த ஏழு ஆண்டுகளில், 70 முறை நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என்றார்.
அதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''கடந்த ஏழு ஆண்டுகளில், 70 முறை வினாத்தாள் கசிவுகள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
''தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு இதுவரை 240 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 4.5 கோடி பேர் தேர்வு எழுதியுள்ளனர்,'' என்றார்.
இதை கேட்ட எம்.பி., மாணிக்கம் தாகூர், ''அப்படியானால் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்வாரா?'' என்றார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''என் தலைவரான பிரதமர் மோடியின் கருணையில் நான் இந்த பதவியில் தொடர்கிறேன். 4,700 மையங்களில் தேர்வு நடைபெற்றும், பீஹாரின் பாட்னாவில் மட்டும் குளறுபடி ஏற்பட்டது. அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை.
''அனைத்து தகவல்களுமே பொதுவெளியில் உள்ளன. சி.பி.ஐ.,யும் விசாரிக்கிறது. பொறுப்பு கூறல் என வரும்போது அரசு அதற்கு கூட்டாக பதில் அளிக்கும்,'' என்றார்.
வடசென்னை எம்.பி., கலாநிதி பேசுகையில், ''நீட் தேர்வை விலக்கிக் கொள்கிறோம் என்ற ஒரு வரி பதில் தான் தேவை. ஆனால், இது குறித்து எந்த யோசனையும் அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை,'' என்றார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், ''நீட் தேர்வை 2010ல் கொண்டு வந்ததே அப்போதிருந்த அரசு தான். மத்தியில் யார் ஆட்சி செய்தது? யார் இந்த தேர்வை கொண்டு வந்தனரோ, அவர்களே தற்போது எதிர்க்கின்றனர். நாடு முழுதும் ஒரே மாதிரியான இந்த தேர்வை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.
தெளிவு இல்லை
இதை தொடர்ந்து, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது:
இது, நாடு முழுதும் உள்ள தீவிரமான பிரச்னை. நீட் தேர்வு மட்டுமின்றி நாட்டில் நடக்கும் மிக முக்கியமான அனைத்து தேர்வு முறைகளிலும் சிக்கல் உள்ளது. இது அப்பட்டமாகவும், தெளிவாகவும் தெரிகிறது. இந்த தேர்வு முறையே மோசடியானது.
இந்த முறைகேட்டில், தன்னை தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம் சுமத்துவதில் அமைச்சர் ஆர்வமாக உள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய அடிப்படை அறிவோ, புரிதலோ கூட அவரிடம் தெரியவில்லை. அமைச்சரிடம் தெளிவே இல்லை. வினாத்தாள் கசிந்ததை மாணவர்கள் தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.
பணம் படைத்தவர்கள் தேர்வு நடைமுறையை விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.
இப்பிரச்னையில் அமைப்பு ரீதியாக சிக்கல் உள்ளது. அதை சரி செய்வதற்கு அமைச்சரும், அரசும் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து தெளிவான பதிலை எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோசடி
இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்:
தேர்வு முறையிலேயே மோசடி இருப்பதாக குற்றஞ்சாட்டுவது துரதிர்ஷ்டவசமானது. உண்மையை யாரும் மறைக்க முடியாது. எதிர்க்கட்சி தலைவர் முறையற்ற விஷயங்களை பேசுகிறார். 'ரிமோட் கன்ட்ரோல்' வாயிலாக ஆட்சி செய்தவர்கள் நீங்கள்.
தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை எதிர்க்கின்றன. இவ்விஷயத்தில், காங்., கட்சிக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
அப்போது இடைமறித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை. நாட்டின் ஒட்டுமொத்த தேர்வுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டால், அது இந்திய கல்வி முறையிலும், உலகம் முழுதும் அதைப் பற்றிய பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.
சபாநாயகர் பேசிய பிறகு ராகுல் பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ராகுல் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
- நமது டில்லி நிருபர் -