11 எம்.எல்.சி., பதவிக்கு 3 கட்சியினரும் வேட்புமனு தாக்கல்
11 எம்.எல்.சி., பதவிக்கு 3 கட்சியினரும் வேட்புமனு தாக்கல்
ADDED : ஜூன் 04, 2024 04:23 AM

பெங்களூரு, : எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கப்படும், 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு, பா.ஜ., - காங்., - ம.ஜ.த., என்ற மூன்று கட்சி வேட்பாளர்களும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி.
கர்நாடக சட்ட மேலவையில், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்த, காங்கிரசின் போசராஜு, கோவிந்த்ராஜ், அரவிந்த் குமார் அரலி, ஹரிஷ்குமார்; பா.ஜ.,வின் தேஜஸ்வினி கவுடா, நஞ்சுண்டி, ரகுநாத்ராவ் மல்காபுரே, ரவிகுமார், முனிராஜுகவுடா, ருத்ரேகவுடா; ம.ஜ.த.,வின் பாரூக் ஆகிய 11 எம்.எல்.சி.,க்களின் பதவி காலம், ஜூன் 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
எம்.எல்.ஏ., ஆதரவு
பதவி காலம் முடியும், 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும். இதற்கான வேட்புமனு தாக்கல் மே 27ம் தேதி துவங்கியது. மனு தாக்கலுக்கு, நேற்று கடைசி நாள்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 19 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காங்., - 7, பா.ஜ., - 3, ம.ஜ.த., - 1 எம்.எல்.சி., பதவி கிடைக்கும். காங்கிரஸ் சார்பில், 300 பேரும்; பா.ஜ., சார்பில், 70 பேரும்; ம.ஜ.த., சார்பில், 10- பேரும் எம்.எல்.சி., பதவிக்கு துண்டு போட்டிருந்தனர்.
ஆனால், கட்சி வளர்ச்சிக்கு நீண்ட காலமாக உழைத்ததன் அடிப்படையிலும், மேலிட தலைவர்களின் ஆதரவு இருப்பவர்களுக்கும், அரசியல் கட்சிகள் வாய்ப்பு தந்துள்ளன.
அமைச்சரும் போட்டி
காங்கிரசில், தற்போது எம்.எல்.சி.,க்களாக பதவி வகிக்கும் அமைச்சர் போசராஜு, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்த்ராஜ், முதல்வரின் மகன் யதீந்திரா, முன்னாள் எம்.எல்.சி., ஐவன் டிசோசா, கட்சியின் மாநில செயல் தலைவர் வசந்த்குமார், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நெருங்கிய ஆதரவாளர் ஜெகதேவ் குட்டேதார், ஷிவமொகா பிரமுகர் பில்கிஸ் பானு ஆகிய ஏழு வேட்பாளர்கள், பெங்களூரு தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அப்போது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உட்பட காங்., தலைவர்கள் உடனிருந்தனர்.
இதுபோன்று, பா.ஜ.,வில், முன்னாள் தேசிய பொது செயலர் சி.டி.ரவி, தற்போதைய எம்.எல்.சி., ரவிகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மாருதிராவ் முலே ஆகிய மூன்று வேட்பாளர்கள், கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி உட்பட மூத்த பிரமுகர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
3 முறை தோல்வி
மேலும், ம.ஜ.த.,வில், யஷ்வந்த்ப்பூர் சட்டசபை தொகுதியில் மூன்று தொடர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஜவராயி கவுடாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், முன்னாள் முதல்வர் குமாரசாமி, மூத்த எம்.எல்.ஏ., - ஜி.டி.தேவகவுடா உட்பட கட்சி பிரமுகர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
இன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு, வரும் 6ம் தேதி கடைசி நாள். மனுக்களை யாரும் திரும்ப பெற மாட்டார்கள் என்பது உறுதி. எனவே 11 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, அன்றைய தினம் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.