ADDED : ஜூன் 08, 2024 04:32 AM
சிக்கபல்லாபூர், : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பெஸ்காம் ஊழியர்கள் மூவர் உயிரிழந்தனர்.
சிக்கபல்லாபூர் கவுரிபிதனுாரின் பி.தாண்டா கிராமத்தில் வசித்த ஸ்ரீதர் நாயக், 28, பரேசந்திராவின் வேணுகோபால், 38, பெல்லாளஹள்ளியில் வசித்தவர் மஞ்சுநாத், 37. இவர்கள் பெஸ்காமில் லைன்மேனாக பணியாற்றினர்.
பணி நிமித்தமாக இவர்கள், சிக்கபல்லாபூரின் நகரகெரேவுக்கு காரில் சென்றிருந்தனர். பணியை முடித்து கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று முன் தினம் நள்ளிரவு, கவுரி பிதனுாரின் நகரகெரே பேரூராட்சிக்கு உட்பட்ட ஹொசஹள்ளி கிராமம் அருகில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் ஸ்ரீதர் நாயக், மஞ்சுநாத், வேணுகோபால் ஆகிய மூவரும் துாக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடல், புதருக்குள் சிக்கியது. இவருடன் வந்த மற்றொரு ஊழியர், காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார்.
நேற்று காலை வரை, இது யாருக்கும் தெரியவில்லை. காலையில் கிராமத்தினர் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் பார்த்தபோது, மூவரும் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டனர். காரில் மயங்கியிருந்த சிவகுமாரை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
கவுரி பிதனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.