ADDED : ஜூன் 23, 2024 06:20 AM

யாத்கிர்: மது விடுதியில் ஏற்பட்ட தகராறில், வன அலுவலரை அடித்துக் கொன்ற, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாத்கிர் ஷஹாபூர் டவுனில் வசித்தவர் மகேஷ் கனஹட்டி, 47. ஷஹாபூர் வனத்துறை அலுவலகத்தில், அலுவலராக வேலை செய்தார்.
தினமும் இரவில் குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வது வழக்கம். கடந்த 5ம் தேதி, ஷஹாபூர் டவுனில் உள்ள மதுபான விடுதியில் இருந்து, சில அடி துாரத்தில் இறந்து கிடந்தார்.
குடிபோதையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என நினைத்து, ஷஹாபூர் போலீசார், மர்ம சாவு என வழக்குப் பதிவு செய்தனர்
இந்நிலையில், மகேஷ் கொலை செய்யப்பட்டதாக, அவரது மனைவி நாகவேணி, 11ம் தேதி, ஷஹாபூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர். மதுபான விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 5ம் தேதி குடிபோதையில் மகேசுக்கும், சிலருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது தெரிந்தது.
இதன் பின்னர் மதுபான விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மகேசை, ஐந்து பேர் கும்பல் தாக்குவதும், இதில் நிலை குலைந்து விழுந்து மகேஷ் இறந்த காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இந்த காட்சிகளின் அடிப்படையில் ராஜு, ரேகு நாயக், தாரா சிங், நரசிங், பிரகாஷ் ஆகிய ஐந்து பேரை, ஷஹாபூர் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
கொல்லப்பட்ட வன அலுவலர் மகேஷ் கனஹட்டி மற்றும் கைதானவர்கள்.