பா.ஜ.,வுக்கு ஓட்டளித்ததால் 'தலாக்' கணவர் மீது புகாரளித்த பெண்
பா.ஜ.,வுக்கு ஓட்டளித்ததால் 'தலாக்' கணவர் மீது புகாரளித்த பெண்
UPDATED : ஜூன் 26, 2024 05:04 AM
ADDED : ஜூன் 26, 2024 01:37 AM

சிந்த்வாரா, மத்திய பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்ததற்காக, தன்னை தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகாரளித்தார்.
ஆத்திரம்
ம.பி.,யில் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த, 26 வயதான முஸ்லிம் பெண், போலீசில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
எட்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் ஆனது. சில காலம் சந்தோஷமாக இருந்தோம். அதன்பின், என் கணவர், மாமியார் மற்றும் கணவரின் சகோதரிகள், வரதட்சணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்த துவங்கினர்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், என்னை வீட்டை விட்டு வெளியேற்றினர். என் கணவருடன் வாடகை அறையில் தங்கினேன்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்ததால், என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என் மீது ஆத்திரம் அடைந்தனர்.
இதை காரணமாக கூறி, என் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்தார். கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் கணவரின் நான்கு சகோதரிகள் மீது, போலீசார் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பெண்ணின் கணவர் கூறியதாவது:
உடனடியாக முத்தலாக் அளிக்கவில்லை. 2022 மார்ச் 30ல், முதல் தலாக் அளிக்கப்பட்டது. அதன் பின், 2023, அக்., மற்றும் நவ., மாதங்களில் அடுத்தடுத்து இரு முறை தலாக் கூறினேன்.
அந்த காலத்தில் தேர்தல் எதுவும் நடக்கவில்லை. என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தது. அதை கண்டித்தும் அவர் திருந்துவதாக இல்லை. எனவே தான் முத்தலாக் அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முத்தலாக் தடை சட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தற்போது இந்த பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.