முன்னாள் முதல்வரை தோற்கடித்த சிறைக்கைதி அப்துல் ரஷீத்
முன்னாள் முதல்வரை தோற்கடித்த சிறைக்கைதி அப்துல் ரஷீத்
ADDED : ஜூன் 05, 2024 01:04 AM

பாரமுல்லா:ஜம்மு - காஷ்மீரில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட அப்துல் ரஷீத் ஷேக் என்ற பொறியாளர், சிறையில் இருந்தபடி தோற்கடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ல் ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், நடக்கும் முதல் லோக்சபா தேர்தல் இது என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இங்குள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில், 'இண்டியா' கூட்டணியில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் காங்கிரஸ் போட்டியிட்டன. இவர்களுக்கு எதிராக, பா.ஜ.,வும் களத்தில் இறங்கியது.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கிய வழக்கில், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக டில்லி திஹார் சிறையில் உள்ளார்.
இதனால், அப்துல் ரஷீதுக்காக தேர்தல் பிரசாரத்தை அவரது இரு மகன்கள் செய்தனர். இந்த சூழலில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில், ஒமர் அப்துல்லாவை அவர் தோற்கடித்து உள்ளார்.
பொறியாளர் அப்துல் ரஷீத், வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இதுகுறித்து அவரின் மகன் அப்ரார் கூறுகையில், ''நாங்கள் நீதிக்காக போராடினோம். காஷ்மீர் மக்கள் என்னையும், என் தந்தையையும் முழு மனதுடன் ஆதரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் ஆதரவால்தான் இதை சாதிக்க முடிந்தது. எங்கள் தேர்தல் பிரசாரத்துக்கு 27,000 ரூபாய் மட்டுமே செலவானது,'' என்றார்.
அதேபோல், மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, ஆனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் களமிறங்கினார். அவரை எதிர்த்து களமிறங்கிய தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் அஹமதுவிடம், மெகபூபா தோல்வியை தழுவினார்.
இதையடுத்து, தோல்வியை ஒப்புக்கொண்ட மெகபூபா முப்தி, ''வெற்றியும், தோல்வியும் போட்டியில் ஓர் அங்கம். மக்கள் மற்றும் ஜனநாயக தொண்டர்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறேன்; மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.