குற்றத்துக்கு உடந்தையாக உள்ள நபர்களும் குற்றவாளிகளே: ஐகோர்ட்
குற்றத்துக்கு உடந்தையாக உள்ள நபர்களும் குற்றவாளிகளே: ஐகோர்ட்
ADDED : ஆக 01, 2024 02:12 AM

மும்பை : 'குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர்கள் குற்றவாளிக்கு இணையான பொதுவான நோக்கத்தில் செயல்படுவதால் அவர்களும் குற்றவாளிகளே' என, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது.
கடந்த 2015ல், மஹாராஷ்டிராவின் சந்திராபூர் அருகே உள்ள வனப்பகுதிக்கு, தன் ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர் சென்றார். அப்போது, அங்கு வந்த நான்கு பேர் தங்களை வனக் காவலர்கள் எனக் கூறி, இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டினர். அதில், இருவர் அந்த பெண்ணை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தனர். மற்ற இருவர், அவருடன் வந்த ஆண் நண்பரை கடுமையாக தாக்கினர்.
உண்மையான வனக் காவலர்கள் வந்ததை அடுத்து, நால்வரும் தப்பிச் சென்றனர். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரை அடுத்து நால்வர் மீதும் கூட்டு பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நால்வருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த சம்பவத்தில் பலாத்காரத்தில் ஈடுபடாத இருவர், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல் முறையீடு செய்தனர்.
அதில், 'பாதிக்கப்பட்ட பெண்ணை நாங்கள் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. எங்கள் இருவரையும் குற்றவாளிகளாக கருத முடியாது' என, தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, நால்வர் மீதான தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.
அவர் தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
இந்த வழக்கில், கூட்டு பலாத்கார சம்பவத்தை தடுக்கும் வகையில், ஆண் நண்பர் தாக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தாக்கப்படாமல் இருந்திருந்தால், இந்த குற்றச் சம்பவம் நிகழாமல் தடுத்திருக்க முடியும்.
குற்றவாளிகள் நால்வரும் பொதுவான நோக்கத்தில் செயல்பட்டுள்ளனர் என்பதற்கு ஆண் நண்பர் மீதான தாக்குதலே ஆதாரமாகும். கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவருக்கு, மற்ற இருவரின் செயல் உடந்தையாக உள்ளது. ஆகையால், இவர்களும் குற்றவாளிகள் தான். நால்வருக்கும் அளிக்கப்பட்ட தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.