எத்னாலின் கடிதத்துக்கு அமித் ஷா பதில் வால்மீகி ஆணைய முறைகேட்டாளர்கள் 'கிலி'
எத்னாலின் கடிதத்துக்கு அமித் ஷா பதில் வால்மீகி ஆணைய முறைகேட்டாளர்கள் 'கிலி'
ADDED : ஜூன் 29, 2024 11:18 PM

பெங்களூரு: விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் எழுதிய கடிதத்துக்கு, மத்திய உள்துறை அமித்ஷா பதில் எழுதியுள்ளார். இதனால் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் தொடர்பு கொண்டவர்கள் 'கிலி' அடைந்துள்ளனர்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் என்பவர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், 'வால்மீகி ஆணையத்தில் முறைகேடு நடந்துள்ளது. எஸ்.சி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 187 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தெலுங்கானா கூட்டுறவு வங்கிக்கு, பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டிருந்தார்.
இதன் பின் எழுந்த அமளியில், அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கடிதம் எழுதியிருந்தார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.
அதிகாரிகள் தற்கொலை
கடந்த 2016ல் மடிகேரியில், டெபுடி எஸ்.பி., கணபதி தற்கொலை வழக்கு, 2019ல், பரமேஸ்வரின் தனி உதவியாளர் தற்கொலை, ஒப்பந்ததாரர் தற்கொலை சம்பவங்கள் குறித்தும், விசாரணை நடத்த வேண்டும்.
காங்கிரஸ் அரசில் ஊழல் செய்ய, ஒத்துழைப்பு தரும்படி அதிகாரிகளுக்கு நெருக்கடி உள்ளது. இதனால் நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
கடந்த, 2019ல் பரமேஸ்வரின் தனி உதவியாளர், பெங்களூரின், பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார். 2016 ஜூலையில் டெபுடி எஸ்.பி., கணபதி தற்கொலை வழக்கில், அன்றைய அமைச்சர் ஜார்ஜின் பெயர் அடிபட்டது.
நடப்பாண்டு மே மாதம், கே.ஆர்.ஐ.டி.எல்., ஒப்பந்ததாரர் கவுடர், அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டி விட்டு, தாவணகெரேவில் தற்கொலை செய்து கொண்டார்.
இப்போது வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், ஆணையத்தின் பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யும்படி, நெருக்கடி கொடுத்ததால், தற்கொலை செய்து கொண்டார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின், 88.62 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதாக, யூனியன் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சி.பி,ஐ,,யில் வங்கி புகார் அளித்துள்ளது.
வங்கியின் மூன்று அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ஆழமாக விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
பதில் கடிதம்
எத்னாலின் கடிதத்துக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா பதில் கடிதம் எழுதியுள்ளார்.
'உங்கள் கடிதத்தை பெற்றுக் கொண்டேன். கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்' என பதில் வந்துள்ளது. இதனால் முறைகேட்டில் தொடர்பு கொண்டவர்கள் 'கிலி' அடைந்துள்ளனர்.