ADDED : ஜூலை 21, 2024 07:33 AM

மாண்டியா: காவிரி நீர்ப்பாசனப் பகுதிகளில், கன மழை பெய்வதால் மாண்டியாவின், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணையின் நீர்மட்டம் உயர்கிறது. கூடுதல் நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மாண்டியாவின், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில், சுற்றுலா பயணியர் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வார இறுதி நாட்களில், ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருவது வழக்கம். காவிரி ஆற்றில் படகு சவாரி செய்த படி, இயற்கை அழகையும், பறவைகளின் இன்னிசை ரீங்காரத்தை ரசிப்பர்.
தற்போது இங்குள்ள காவிரி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் படகு சவாரி செய்வது அபாயமானது. வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும். எனவே மறு உத்தரவு வரும்வரை, ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் படகு சவாரிக்குத் தடைவிதித்து, மாண்டியா மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.