உடல் குறைபாடு உள்ளவர்கள் கலெக்டர் வேலைக்கு வரலாமா? மூத்த அதிகாரியின் கருத்தால் சர்ச்சை பெண் அதிகாரி கேள்வியால் சர்ச்சை
உடல் குறைபாடு உள்ளவர்கள் கலெக்டர் வேலைக்கு வரலாமா? மூத்த அதிகாரியின் கருத்தால் சர்ச்சை பெண் அதிகாரி கேள்வியால் சர்ச்சை
ADDED : ஜூலை 23, 2024 01:40 AM

புதுடில்லி, மஹாராஷ்டிராவின் புனேவில் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர், உடல்நலக்குறைபாடு மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரது இரண்டு ஆண்டு பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வானது குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்து உள்ளது.
'பட பட' கருத்து
இந்த விவகாரத்தை தொடர்ந்து, உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புத் திறனாளிகள் என்ற அடிப்படையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவது கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
இது குறித்து தெலுங்கானா நிதி கமிஷனில் உறுப்பு செயலராக உள்ள ஐ.ஏ.எஸ்., மூத்த அதிகாரி ஸ்மிதா சபர்வால் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு:
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய மரியாதையுடன் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவரை பைலட்டாக விமான நிறுவனம் நியமிக்குமா அல்லது அறுவை சிகிச்சை நிபுணராக இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?
ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் களப்பணிகள் பெரும் பங்கு வகிக்கும். நேரம் காலம் பார்க்காமல் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும்.
மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.
இது போன்ற பணிகளுக்கு உடல்தகுதி மிகவும் முக்கியம். நம் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிக தெம்பு தேவைப்படும்.
எனவே, இதுபோன்ற பணிகளில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புத் திறனாளிகள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அவசியமா என்பதை யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
'தவறான வாதம்'
இந்த கருத்து பல்வேறு தளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கருத்துக்கு கண்டனங்கள் குவிகின்றன.
சிவசேனா எம்.பி., பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “பொருளாதாரத்தில் பின்தங்கியோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்ட இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் விமர்சித்து நான் பார்த்ததில்லை.
“இடஒதுக்கீடு என்பது பன்முகத்தன்மை மற்றும் எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதை ஊக்குவிக்கிறது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் அறியாமையை அவரது தவறான வாதம் வெளிக்காட்டி உள்ளது,” என்றார்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருணா நந்தி கூறுகையில், ''மாற்றுத்திறனாளியாக இருப்பதற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், புத்திசாலித்தனத்துக்கும் தொடர்பில்லை,” என்றார்.