சென்னபட்டணா இடைத்தேர்தல் சிவகுமார் தம்பி சுரேஷ் போட்டி?
சென்னபட்டணா இடைத்தேர்தல் சிவகுமார் தம்பி சுரேஷ் போட்டி?
ADDED : ஜூன் 20, 2024 05:46 AM

ராம்நகர்: சென்னபட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராம்நகர், சென்னபட்டணா தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் குமாரசாமி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில், கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சராக குமாரசாமி பதவி வகிக்கிறார்.
எம்.பி., ஆனதால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சென்னபட்டணா தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இடைத்தேர்தலில் பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, குமாரசாமியின் மகன் நிகில் அல்லது பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ் போட்டியிடலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் சுரேஷ் மறுத்தார்.
சென்னபட்டணா தொகுதிக்கு ஆச்சரிய வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், துணை முதல்வர் சிவகுமார், சென்னபட்டணாவில் நேற்று அளித்த பேட்டி:
சென்னபட்டணா எனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த தொகுதி. அந்த தொகுதியில் உள்ள சாத்தனுாரில் இருந்து, மூன்று முறை வெற்றி பெற்றுள்ளேன். சென்னபட்டணா தாலுகா மக்களுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக்கடன் நிறைய உள்ளது. கனகபுராவை விட சென்னபட்டணாவில் அதிக வளர்ச்சி பணிகள் செய்ய எனக்கு வாய்ப்பு உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னபட்டணா மக்கள், எங்கள் கட்சிகளின் தலைவர்களுடன் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகுமார் தற்போது கனகபுரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் சிவகுமார் தான். இதனால், சென்னபட்டணா தொகுதியில் தன் தம்பி சுரேஷை நிறுத்தி, அவரை வெற்றி பெற வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.