ஜெய்ராம் ரமேஷுக்கு கூடுதல் அவகாசம் தர ஆணையம் மறுப்பு
ஜெய்ராம் ரமேஷுக்கு கூடுதல் அவகாசம் தர ஆணையம் மறுப்பு
ADDED : ஜூன் 03, 2024 11:46 PM

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கலெக்டர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாக முன் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அவகாசம் கோரிய நிலையில், தலைமை தேர்தல் கமிஷன் அதை நேற்று நிராகரித்தது.
கடந்த 1ம் தேதி, இறுதிகட்ட ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், நாடு முழுதும், 150 கலெக்டர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி உள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தவிர, தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை, பா.ஜ., இழந்துள்ளது இதன் வாயிலாக வெளிப்படையாக தெரிவதாகவும், யாருடைய அழுத்தத்துக்கும் அஞ்சாமல், அரசமைப்பை அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் எனவும், அதிகாரிகளின் செயல்பாடுகளை மக்கள் கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விரிவான தகவல் மற்றும் ஆதாரங்களை அளிக்கும்படி, ஜெய்ராம் ரமேஷிடம் தலைமை தேர்தல்கமிஷன் கோரியது.
இதற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என, ஜெய்ராம் ரமேஷ் தரப்பில் இருந்து கடிதம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கால அவகாசம் கோரி நீங்கள் வைத்த கோரிக்கையை நிராகரிக்கப்படுகிறது.
'குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில், இது தொடர்பாக தேர்தல் கமிஷன் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.