சர்ச்சை அதிகாரி மீது குவியும் புகார்களை விசாரிக்க குழு
சர்ச்சை அதிகாரி மீது குவியும் புகார்களை விசாரிக்க குழு
ADDED : ஜூலை 12, 2024 02:07 AM

புதுடில்லி, மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா கேத்கர். இவர், யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில், 821-வது இடத்தைப் பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர், புனேவில் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
பயிற்சி அதிகாரி களுக்கு வழங்கப்படாத வசதிகளையும், சில ஆடம்பர வசதிகளையும் இவர் அத்துமீறி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் புனேவில் இருந்து வாஷிம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பூஜா கேத்கர், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.
இதுகுறித்து விசாரித்து உண்மையைக் கண்டறிய, மத்திய அரசு ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பூஜா கேத்கர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க கூடுதல் செயலர் அந்தஸ்தில் பதவி வகிக்கும் மூத்த அதிகாரி விசாரித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வார்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக, பூஜா தனக்கு சொந்தமான 'ஆடி' காரில், 'மஹாராஷ்டிரா அரசு' என்ற பெயர்ப் பலகையுடன், சிவப்பு - நீல சுழல் விளக்குடன் வலம் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் நேரில் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றனர்.
ஆனால், அங்கு ஆடி கார் இல்லை. எனினும், அவரது பெயருடன் பதிவு செய்யப்பட்ட ஆடி காருக்கு, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, 26,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது செலுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.