பார்லிமென்டில் சிலைகள் மாற்றம் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பார்லிமென்டில் சிலைகள் மாற்றம் அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2024 11:50 PM

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 293 தொகுதிகளை வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து, பார்லிமென்ட் வளாகங்களை துாய்மைப்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக பழைய பார்லிமென்ட் கட்டடத்தின் முன் வைக்கப்பட்டிருந்த மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்பட்டு, வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.
இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 'பார்லிமென்ட் வளாகத்தின் முகப்புப் பகுதியில் அமைந்திருந்த மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. இது, அவர்களை அவமானப்படுத்தும் செயல்' என, கூறியுள்ளார்.
இதுகுறித்து பார்லிமென்ட் செயலக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளதாவது:
புதிய அரசு பதவி ஏற்றவுடன், விரைவில் இரு சபைகளும் கூட உள்ளன. எனவே, பார்லிமென்ட் வளாகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் ஒரு பகுதியாக மஹாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பார்லிமென்ட் வளாகத்தில் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவை அகற்றப்படவில்லை.
திட்டமிட்டபடி பழைய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள சம்வி தான் சதன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள தோட்டத்தில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.