ADDED : ஜூன் 24, 2024 11:26 PM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நாகர் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் கடனாக சில தொகையை வாங்கியுள்ளார். அத்தொகையை அவர் திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து, வெங்கடேஷ் அவரது விளைநிலத்தில் விவசாய பணி செய்து கடனை கழிக்கும்படி பழங்குடியின பெண்ணை அழைத்தார்.
சில நாட்கள் பணியாற்றிய அந்த பெண், அதற்கு பின் அங்கிருந்து வெளியேறினார். இதனால் கோபம் அடைந்த வெங்கடேஷ், அந்த பெண்ணை தேடிப்பிடித்து அவரது நிலத்திற்கு இழுத்து வந்தார்.
பொதுவெளியில் அனைவரது முன்னிலையில் அடித்து உதைத்ததுடன், அந்த பெண் அணிந்திருந்த புடவையையும் கிழித்தார்.
வெங்கடேஷின் அடியாட்கள் அந்த பெண்ணை சூழ்ந்து சரமாரியாக தாக்கினர்; மரக்கட்டையால் தாக்கியதுடன், அவரது கண்களில் மிளகாய் பொடியை துாவி சித்ரவதை செய்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர்.
இதற்கிடையே, பழங்குடியின பெண்ணை தாக்கியது தொடர்பாக வெங்கடேஷ், அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.