ADDED : ஜூலை 26, 2024 06:08 AM
ராஞ்சி: ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி நடக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராஜ்மஹால் தொகுதியில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை எதிர்த்து, அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., லோபின் ஹெம்ப்ரோம், சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதேபோல், லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரசில் இணைந்தார். அவர், ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கட்சி உத்தரவை மீறி இருவரும் செயல்பட்டதால், தகுதிநீக்கம் செய்யும்படி, சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோவிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு மீது, சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், லோபின் ஹெம்ப்ரோம், ஜெய்பிரகாஷ் பாய் படேல் ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.