ADDED : ஜூலை 22, 2024 06:35 AM

மைசூரு: கணவனை இழந்த பெண்ணுடன் தகராறு செய்து, அவரை அடித்து கொலை செய்த உறவினர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு, பிரியாபட்டணாவின் சவுதி கிராமத்தில் வசித்தவர் சம்பத்குமார், 37. இவரது மனைவி பாக்யவதி, 32. தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில், சம்பத் குமார் உயிரிழந்தார். கணவரை பறிகொடுத்தாலும், மனம் தளராமல் மகன்களுக்காக மன திடத்துடன் வாழ துவங்கினார்.
தங்களுக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்ததன் மூலம், நல்ல வருமானம் ஈட்டினார்.
கணவர் விபத்தில் இறந்ததால், நிவாரணமாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது.
சம்பத்குமார் இறந்த பின், சொத்துகளை அபகரிக்கலாம் என நினைத்திருந்த உறவினர்களால், பாக்யவதி நன்றாக வாழ்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அவருடன் அவ்வப்போது தகராறு செய்தனர்.
நேற்று காலை, முத்துராஜ் உட்பட உறவினர்கள் சிலர், பாக்யவதி கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
சம்பவம் தொடர்பாக உறவினர்களான மஞ்சு, லட்சுமி, முக்தா, பீமா, முத்துராஜ் உட்பட எட்டு பேரை, பிரியாபட்டணா போலீசார் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பொறாமையால் இவர்கள் கொலை செய்தனரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது, விசாரணைக்கு பின்னரே தெரியும் என, போலீசார் கூறினர்.