ADDED : ஜூலை 22, 2024 06:16 AM

பெங்களூரு: கர்நாடகாவில் தக்காளி விலை, மீண்டும் ஏறுமுகமாவதால் விவசாயிகள் குஷி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்தாண்டு, தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்தது. கிலோவுக்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனையானது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமை பெற்ற கோலார் ஏ.பி.எம்.சி.,யில் 15 கிலோ கொண்ட பாக்ஸ், 2,000 ரூபாய் முதல், 2,700 ரூபாய் வரை விற்பனையானது.
கோடீஸ்வரர்கள்
தக்காளி பயிரிட்டிருந்த பலர், ஒரே நாளில் லட்சாதிபதிகளாகவும், சிலர் கோடீஸ்வரர்களாகவும் ஆகினர். அதன்பின் படிப்படியாக விலை குறைந்தது. வாங்குவோர் இல்லாமல் குவிந்து கிடந்ததால், விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். போட்ட முதலீடும் கிடைக்காது என்பதால், விவசாயிகள் சிலர், தக்காளியை அறுவடை செய்யாமல், தோட்டத்திலேயே விட்டு விட்டனர். சிலர் டிராக்டரால் அழித்தனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை, கிடுகிடுவென அதிகரிக்கிறது. கிலோவுக்கு 100 ரூபாயை எட்டியுள்ளது. கோலார் மார்க்கெட்டில், 15 கிலோ கொண்ட பாக்ஸ் விலை, 900 முதல் 1,200 ரூபாய் வரை விற்கிறது. வரும் நாட்களில் 2,000 ரூபாய் எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல லாபம் கிடைப்பதால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட விவசாயிகள், அதிக அளவில் தக்காளி பயிரிடுகின்றனர். சமீப நாட்களாக மழை பெய்வதால், விளைச்சல் சேதம் அடைந்தது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. கோலாரின் தக்காளிக்கு, டில்லி, ஒடிசா, குஜராத், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் நல்ல மவுசு உள்ளது. அம்மாநிலங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது.
குறைந்தது வரத்து
இதற்கு முன் தக்காளி சீசனில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கோலார் மார்க்கெட்டுக்கு ஒரு லட்சம் பாக்ஸ் தக்காளி வந்தது. இப்போது 55,274 பாக்ஸ் மட்டுமே வருகிறது. ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் மாண்டியா, சாம்ராஜ் நகர், மைசூரு, நெலமங்களாவில் இருந்தும், தக்காளி வந்தது. இப்போது வரவில்லை. தற்போதைக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பு இல்லை என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.