லால்பாக்கில் நாளை மலர் கண்காட்சி துவக்கம் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
லால்பாக்கில் நாளை மலர் கண்காட்சி துவக்கம் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்
ADDED : ஆக 07, 2024 05:54 AM
பெங்களூரு: சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக் பூங்காவில் 216வது மலர் கண்காட்சி நாளை துவங்கி 12 நாட்கள் நடக்கிறது. 'சீருடை அணிந்து வரும் பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்' என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.
பெங்களூரு லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் குடியரசு, சுதந்திர தின விழாவை ஒட்டி மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், லால்பாக் பூங்காவில் 12 நாட்கள் மலர் கண்காட்சி நடக்க உள்ளது. நாளை காலை 10:30 மணிக்கு லால்பாக் பூங்கா கண்ணாடி மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையா, மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
துணை முதல்வர் சிவகுமார், தோட்டக்கலை அமைச்சர் மல்லிகார்ஜுன், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ரூ.100 கட்டணம்
அம்பேத்கரின் பேரன் பீமாராவ் யஷ்வந்த் அம்பேத்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பெங்களூரு தெற்கு பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா, சிக்பேட் பா.ஜ., -- எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார், எம்.எல்.சி.,க்கள் ஷ்ரவணா, ராமோஜி கவுடா, தலைமைச் செயலர் ஷாலினி, கர்நாடக தோட்டக்கலை செயலர் சம்லா இக்பால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மலர் கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து தோட்டக்கலை இயக்குனர் ரமேஷ் நேற்று அளித்த பேட்டி:
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினத்தை ஒட்டி லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை 12 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கிறது. தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.
இதில், 8, 9, 12, 13, 14, 16, 19 ஆகிய தேதிகள் வேலை நாட்கள். இந்த நாட்களில் கண்காட்சியை பார்க்க வரும் பெரியவர்களுக்கு 80 ரூபாயும்; 10, 11, 15, 17, 18 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் ஆகும். இந்த நாட்களில் பெரியவர்களுக்கு 100 ரூபாய் கட்டணம்.
1.75 லட்சம் பூக்கள்
அனைத்து நாட்களிலும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 30 ரூபாய் கட்டணம். அடையாள அட்டை அணிந்து, பள்ளி சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.
இந்த மலர் கண்காட்சியை சட்ட மேதை அம்பேத்கருக்கு அர்ப்பணிக்க உள்ளோம். இந்தோ -- அமெரிக்கன் நிறுவனத்தின கலப்பு விதையை பயன்படுத்தி பாலெனோப்சிஸ், டென்ட்ரோபியம், வண்டா, மொகரா, கட்டிலியா உட்பட 20 ரகத்தை சேர்ந்த 1.75 லட்சம் பூக்கள் கண்காட்சிக்கு பயன்படுத்தப்படுகிறது.
17ம் தேதி பரிசுகள்
கண்ணாடி மையத்தின் நடுப்பகுதியில் 36 அடி அகலம், 32 அடி உயரத்தில் பார்லிமென்ட் கட்டடம் பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தின் முன்பு, பூக்களால் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயர அம்பேத்கர் சிலை வைக்கப்படும்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அவரது சிந்தனைகள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இந்த மலர் கண்காட்சி இருக்கும். கண்காட்சியில் 60 லட்சம் முதல் 80 லட்சம் பேர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறோம். மலர் கண்காட்சியை ஒட்டி பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு 17ம் தேதி பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.