மூணாறில் கன மழை ரோடுகளில் மண்சரிவு, போக்குவரத்து துண்டிப்பு 24 செ.மீ.,மழை கொட்டியதால் நிலச்சரிவு
மூணாறில் கன மழை ரோடுகளில் மண்சரிவு, போக்குவரத்து துண்டிப்பு 24 செ.மீ.,மழை கொட்டியதால் நிலச்சரிவு
ADDED : ஜூலை 31, 2024 02:32 AM

மூணாறு:கேரள மாநிலம் மூணாறில் பெய்த கனமழையால் அனைத்து ரோடுகளிலும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மூணாறில் நேற்று முன்தினம் காலை முதல் பலத்த மழை பெய்த நிலையில் இரவில் தீவிரமடைந்து கொட்டித் தீர்த்தது. நேற்று காலை 8:00 மணிப்படி 24 செ.மீ., பதிவானது.
மூணாறு- உடுமலைபேட்டை ரோட்டில் கன்னிமலை, 8ம் மைல் மற்றும் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மூணாறில் பழைய அரசு கல்லூரி, தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கேப் ரோடு ஆகிய பகுதிகளில் மண்சரிவும் பள்ளிவாசல் எஸ்டேட் பாக்டரி அருகே நிலச்சரிவும் ஏற்பட்டு மூணாறுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. அவை நேற்று காலை சீரமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிது.
தடை: கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு வழியாக தேனிக்கு போக்குவரத்து தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. அதனால் மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாக்காடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உட்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மூணாறு, போதமேடு ரோட்டில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
மூணாறு நகரில் தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலகம் அருகே மண் சரிந்து மூன்று ரோட்டோரக் கடைகள் சேதமடைந்தன. மூணாறு காலனியில் வழங்கல்துறை கோடவுன் அருகே தனியார் தங்கும் விடுதியின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் நிறுத்தியிருந்த ஸ்டாலின் என்பவருக்கு சொந்தமான கார் சேதமடைந்தது.
அணை திறப்பு:
முதிரைபுழை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பழைய மூணாறில் ஊராட்சிக்குச் சொந்தமான தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் ஹெட் ஒர்க்ஸ் அணையில் மூன்று ஷட்டர்கள் திறக்கப்பட்டன. மாட்டுபட்டி அணையில் ஜூலை 26ல் ஒரு ஷட்டர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை மேலும் இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டன. கல்லார், சிவன்மலை, லெட்சுமி ஆகிய எஸ்டேட்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏக்கர் கணக்கில் தேயிலை செடிகள் சேதமடைந்தன. இரவிகுளம் தேசிய பூங்கா மூடப்பட்ட நிலையில், மாட்டுபட்டி, குண்டளை ஆகிய அணைகளில் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது.
மூணாறுராஜமலை பெட்டிமுடியில் நேற்று காலை 8:00 மணிப்படி அதிகபட்சமாக 30.2 செ.மீ., மழை பெய்தது. அப்பகுதியில் 2020 ஆக. 6ல் 36 செ.மீ., மழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 70 தமிழர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.