யமுனை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆறு வார கெடு
யமுனை ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆறு வார கெடு
ADDED : ஜூலை 11, 2024 10:45 PM
இந்தியா கேட்:யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளையும் சட்டவிரோத கட்டுமானங்களையும் அகற்றுவதற்கு டில்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
பருவமழையின்போது டில்லியில் வெள்ளம் தேங்குவது தொடர்பாக தானாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்காக பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
யமுனை ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பல்லுயிர் பூங்காக்கள், ஈரநிலங்களை மேம்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி டி.டி.ஏ., எனும் டில்லி மேம்பாட்டு ஆணையத்துக்கு ஏப்., 8-ம் தேதி, உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ஷாஹீன் பாக் அருகே யமுனை நதிக்கரையில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் உள்ளன. இவற்றை இடிக்க சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர், “யமுனையில் நீர் பாய்வதைத் தடை செய்வதாலும் ஆக்கிரமிப்புகளாலும் வெள்ளம் ஏற்படுகிறது. டில்லியில் ஏற்பட்ட வெள்ளம், மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதை நிபுணர்களை சுட்டிக்காட்டியுள்ளனர்,” என்றார்.
“யமுனை நதிக்கரையில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டி.டி.ஏ., டில்லி மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது,” என, டில்லி காவல்துறை மற்றும் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.
அப்போது உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு:
யமுனை நதிக்கரை, ஆற்றுப்படுகை என அதன் சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுமாறு டி.டி.ஏ., துணைத் தலைவருக்கு உத்தரவிடப்படுகிறது.
டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன், டில்லி காவல்துறை, டி.எம்.ஆர்.சி., நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, பொதுப்பணித்துறை, டில்லி மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான நோடல் அதிகாரியாக டி.டி.ஏ., துணைத் தலைவர் நியமிக்கப்படுகிறார்.
சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளின் கூட்டத்தை ஒரு வாரத்திற்குள் கூட்டி இதுகுறித்து அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு வாரங்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை டி.டி.ஏ., துணைத் தலைவர் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.