'நீட்' தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி பீஹாரில் கைது
'நீட்' தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி பீஹாரில் கைது
ADDED : ஜூலை 12, 2024 01:56 AM

புதுடில்லி, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியை, சி.பி.ஐ., அதிகாரிகள் பீஹாரில் நேற்று கைது செய்தனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த விவகாரத்தில் முன் கூட்டியே வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ, விசாரித்து வருகிறது. இதுவரை பீஹார், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் இந்த வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாசாரிபாகில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோல் பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சஞ்சீவ் என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து பீஹார் மற்றும் ஜார்க்கண்டில், 15 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சஞ்சீவுக்கு உடந்தையாக செயல்பட்ட நாளந்தாவைச் சேர்ந்த, அவரது உறவினர் ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் என்பவருக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டறிந்து, நேற்று அவரை கைது செய்தனர்.
பாட்னாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ராகேஷ் ரஞ்சனை சி.பி.ஐ., அதிகாரிகள் ஆஜர்படுத்திய நிலையில், 10 நாட்கள் காவலில் எடுத்து அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையின்படி பாட்னா மற்றும் மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, கடந்த மே 5ல் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சிலர், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேற்று டில்லியில் சந்தித்தனர். அப்போது அவர்கள், 'நீட் தேர்வு முறைகேடுகளை விரைவாக விசாரித்து தீர்வு காண வேண்டும்.
'ஏற்கனவே, நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சியடைந்த எங்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, இந்த ஆண்டுக்கான வகுப்புகளை விரைவாக துவங்க வழிவகை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர்.