ADDED : ஜூலை 22, 2024 06:26 AM
பெங்களூரு: கடந்த வாரம் வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து விவாதித்து, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க, எதிர்க்கட்சிகள் முயற்சித்தன. இன்று மீண்டும் துவங்கும் சட்டசபை கூட்டத்தில், 'மூடா' முறைகேட்டை அஸ்திரமாக பயன்படுத்த, கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., அரசு இருந்த போது, 40 சதவீத கமிஷன் அரசு என, போஸ்டர் வெளியிட்டும், நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டும், அரசுக்கு அன்றைய எதிர்க்கட்சியான காங்., தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இன்றைய காங்கிரஸ் அரசில் நடந்துள்ள, வால்மீகி மேம்பாட்டு ஆணையம், மூடா எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடுகள் எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வுக்கு அஸ்திரமாக கிடைத்துள்ளன. குறிப்பாக மூடாவில் 14 வீட்டுமனைகள், முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை வைத்தே எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
கடந்த வாரம் ஐந்து நாட்களும், வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடுகளை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, எதிர்க்கட்சிகள் தர்ணா நடத்தியதால், சட்டசபை, மேலவை முடங்கியது. இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. இம்முறை வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டுக்கு பதிலாக, மூடா முறைகேட்டை அஸ்திரமாக பயன்படுத்த, கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு குற்றச்சாட்டுக்கு, சட்டசபையில் முதல்வர் விரிவாக விளக்கம் கொடுத்தார்.
பா.ஜ., அரசில் நடந்த 21 ஊழல்களை பட்டியலிட்டார். வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், ஊழல் நடந்துள்ளதை ஒப்புக்கொண்ட முதல்வர், இதில் அரசுக்கு தொடர்பில்லை. அதிகாரிகள் செய்த தவறு என, விளக்கம் அளித்து எதிர்க்கட்சியினரின் வாயை அடக்கினார்.
இன்று துவங்கும் கூட்டத்தில், மூடா முறைகேடு விஷயத்தை அஸ்திரமாக பயன்படுத்தி, முதல்வரை திணறடிக்க கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
ஒருவேளை இது தொடர்பாக விவாதம் நடந்தால், இந்த வாரமும் சட்டசபை முடங்கலாம். இதனால், வெள்ளப்பெருக்கு, மழை சேதங்கள், மக்களின் முக்கியமான பிரச்னைகள் ஓரங்கட்டப்பட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.