'வாக்குறுதி திட்டங்களை நிறுத்த வேண்டும்' : முதல்வருக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி
'வாக்குறுதி திட்டங்களை நிறுத்த வேண்டும்' : முதல்வருக்கு காங்., - எம்.எல்.ஏ.,க்கள் நெருக்கடி
ADDED : ஜூன் 06, 2024 10:11 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில், குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்தது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் அரசு அமைத்தது. இந்த வெற்றிக்கு, கட்சி அறிவித்த வாக்குறுதி திட்டங்கள், உதவியாக இருந்தன.
கர்நாடகாவில் கிடைத்த வெற்றியால், உற்சாகமடைந்த காங்கிரஸ், தெலுங்கானாவிலும் இந்த திட்டங்களை அறிவித்தது. இங்கும் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. எனவே கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில், 20 க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என, காங்., மேலிடம் எதிர்பார்த்தது.
'சக்தி', 'கிரஹலட்சுமி' திட்டங்கள், பெண்களுக்கானவை. சக்தி திட்டத்தினால், அரசு பஸ்களில் மாநிலம் முழுதும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.
பெண்கள் ஆதரவு
தேர்தலில் ஆண்களின் ஓட்டு கை நழுவினாலும், பெண்கள் கட்சிக்கு ஆதரவாக நிற்பர் என, காங்கிரஸ் உறுதியாக நம்பியது. ஆனால் பெண்கள் ஆதரவு அளிக்கவில்லை என்பதை, தேர்தல் முடிவு நிரூபித்துள்ளதாக கட்சி கருதுகிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர்கள் ராஜண்ணா, செலுவராயசாமி உட்பட பலரும், 'இம்முறை கட்சி தோற்றால், வாக்குறுதி திட்டங்கள் ரத்தாகும்' என மறைமுகமாக எச்சரித்தனர். ஆனால் வாக்காளர்கள் காங்கிரசை ஆதரிக்கவில்லை.
இதனால் அமைச்சர்கள், குறிப்பாக காங்., எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சலில் உள்ளனர்.
'வாக்குறுதி திட்டங்களை இனியும் தொடர வேண்டுமா என்பதை மறு பரிசீலனை செய்யுங்கள்' என, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், முதல்வரை சந்தித்த பல எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்குறுதி திட்டங்களுக்காக, வளர்ச்சி பணிகள் ஒதுக்கப்படுகின்றன. எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டுக்கு நிதி வழங்குவதில்லை.
மாநிலத்தின் அனைத்து வருவாயும், வாக்குறுதி திட்டங்களுக்கு செலவாகிறது.
இவ்வளவு செலவிட்டும், லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
எதிர்பார்ப்பு பொய்யானது
வாக்குறுதி திட்டங்கள், மக்களின் மனதை ஈர்க்கவில்லை என்பது தெரிகிறது. சக்தி, கிரஹலட்சுமி திட்டங்களின் பயனாளிகளான பெண்கள், காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பர் என, எதிர்பார்த்தோம்.
ஆனால் எதிர்பார்ப்பு பொய்யானது. எனவே வாக்குறுதி திட்டங்களை தொடர வேண்டுமா என்பதை, மறு பரிசீலனை செய்யுங்கள்' என முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சில அமைச்சர்களும், இதே கருத்தை தெரிவித்துள்ளனர். இதை ஏற்காத முதல்வர், எந்த காரணத்தை கொண்டும் வாக்குறுதி திட்டங்கள் நிறுத்தப்படாது என, கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குறுதி திட்டங்களின் சாதகம், பாதகங்கள் குறித்து, ஆலோசனை நடத்த ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.