'கஞ்சா அடித்துவிட்டு வருகிறார்' நிதிஷ் மீது ரப்ரி தேவி குற்றச்சாட்டு
'கஞ்சா அடித்துவிட்டு வருகிறார்' நிதிஷ் மீது ரப்ரி தேவி குற்றச்சாட்டு
ADDED : மார் 13, 2025 12:44 AM

பாட்னா, ''அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் சபைக்கு வருகிறார்,'' என, முன்னாள் முதல்வரும், சட்டமேல்சபை எதிர்க்கட்சி தலைவருமான ரப்ரி தேவி குற்றஞ்சாட்டினார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு நேற்று காலை வழக்கம் போல் சட்டமேல்சபை கூடியது.
அப்போது, பிரதான எதிர்க்கட்சியான, முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணியில் உள்ள, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் எம்.எல்.சி., ஷசி யாதவ், தன் கேள்விக்கு அரசு அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்றார்.
குறுக்கிட்ட முதல்வர் நிதிஷ், ''நாங்கள் நிறைய செய்துள்ளோம். முந்தைய அரசு எதுவுமே செய்யவில்லை,'' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த சட்டமேல்சபை எதிர்க்கட்சி தலைவரும், லாலு பிரசாத் மனைவியுமான ரப்ரி தேவி, ''நீங்கள் பதவியேற்பதற்கு முன்பு வரை, எந்த வேலையும் செய்யப்படவில்லை என, குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
''தரவுகளை எடுத்து பாருங்கள். நாங்கள் செய்ததை புரிந்து கொள்வீர்கள். உங்களின் கூற்றுப்படி, நீங்கள் முதல்வராக பதவியேற்ற, 2005க்கு முன் வரை, பெண்கள் ஆடைகள் கூட அணியவில்லை... அப்படித் தானே,'' என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் நிதிஷ், ''பெண்களுக்கு தற்போது மரியாதை கிடைப்பது போல் இதற்கு முன்பு ஒருபோதும் கிடைத்ததில்லை. பெண்களின் நலனுக்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்தது என்ன? உங்கள் கணவர் சிறை சென்றதால், நீங்கள் முதல்வரானீர்கள். உங்களுடன் கூட்டணி வைத்ததற்காக வருத்தப்படுகிறேன்,'' என்றார்.
கடுப்பான ரப்ரி தேவி, சட்டமேல்சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு, சட்டமேல்சபைக்கு முதல்வர் நிதிஷ் குமார் வருகிறார். அவர் பெண்களை மதிப்பதில்லை.
''இன்று என்னை இரண்டாவது முறையாக அவர் அவமரிதை செய்தார். பெண்களை அவமதிப்பதை நிதிஷ் நிறுத்தும் வரை நாங்கள் சபையை புறக்கணிப்போம்,'' என்றார்.
பீஹார் முன்னாள் துணை முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் நிதிஷ் குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என்றார்.