'மனிதர்களின் நடவடிக்கையால் ஆறுகள் ஓடைகளாக மாறுகின்றன'
'மனிதர்களின் நடவடிக்கையால் ஆறுகள் ஓடைகளாக மாறுகின்றன'
UPDATED : ஜூலை 14, 2024 08:53 AM
ADDED : ஜூலை 14, 2024 05:33 AM

புதுடில்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜதிந்தர் ஜெய் சீமா எழுதிய, 'காலநிலை மாற்றம்: கொள்கை, சட்டம் மற்றும் நடைமுறை' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
உயரும் வெப்பநிலை மற்றும் மனிதர்களின் தேவையற்ற நடவடிக்கைகளால் நீண்ட ஆறுகளின் பல்வேறு பகுதிகள் வறண்டு வருகின்றன. இமயமலையில் உருவாகும் சட்லெஜ் நதி பாயும் பகுதிகளில் பல்வேறு அணைகள் கட்டப்படுவதால், இறுதியில் அது ஓடையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றம் நாட்டின் விவசாயத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.
விவசாயத் துறையின் வளர்ச்சி, நாட்டின் நதிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. ரசாயன உர முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் விவசாய வளர்ச்சிக்கு எதிராக உள்ளன. அதேசமயம், ஆறுகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் சமூகத்தின் பரந்த வலையமைப்பை பருவமழை முறைகளின் மாற்றங்கள் கடுமையாக பாதித்துள்ளன.
சுற்றுச்சூழல் சட்டங்கள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடும் அச்சுறுத்தலாக உள்ள பருவநிலை மாற்றத்தை சமாளிக்க நிதி ஆயோக் போல் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும்; சவால்களை எதிர்கொள்ள சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என, இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.