ராணுவத்தினர் ஓய்வூதியம் சீரமைக்காத மத்திய அரசுக்கு ரூ.2,00,000 அபராதம்
ராணுவத்தினர் ஓய்வூதியம் சீரமைக்காத மத்திய அரசுக்கு ரூ.2,00,000 அபராதம்
ADDED : ஜூலை 31, 2024 01:25 AM
புதுடில்லி, ராணுவத்தில் கேப்டன்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு, ஓ.ஆர்.ஓ.பி., என்ற 'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை வழங்குவதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.
முரண்பாடு
ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு, ஓ.ஆர்.ஓ.பி., திட்டத்தை மத்திய அரசு 2015ல் அமல்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த காலத்தில் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விகிதம், தற்போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு இணையாக நிர்ணயிக்கப்பட்டது.
இருப்பினும், வழக்கமான கேப்டன்கள் மற்றும் மேஜர்கள் வரிசையில் உள்ள அதிகாரிகளின் சரியான தரவு இல்லாததால், கேப்டன்கள் மற்றும் மேஜர்களுக்கான ஓய்வூதிய அட்டவணையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டன.
இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காண, ஒரு நபர் நீதிக்குழுவை ராணுவ அமைச்சகம் 2016ல் நியமித்தது.
அதன்பின் இந்த விவகாரத்தில், ராணுவ அமைச்சகத்தால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
அதை தொடர்ந்து, ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தின் கொச்சி அமர்வு, ஒரு நபர் நீதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் முரண்பாடுகளுக்கு தீர்வு காணும்படி ராணுவ அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்தது.
10 சதவீதம்
பல ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி வாதிடுகையில், “இந்த விஷயத்தில் அரசு இன்னும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை,” என்றார்.
அதை கேட்ட நீதிபதிகள், '2021ல் இருந்து இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த வழக்கில் முடிவெடுக்காமல் நீட்டித்துக் கொண்டிருப்பீர்கள்? ஒன்று, 10 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை செலுத்துங்கள் அல்லது உங்களுக்கு அபராதம் விதிக்கிறோம்' எனக் கூறினர்.
மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 10 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் உத்தரவை பிறப்பிக்க துவங்கினர்.
உடனடியாக குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பாத்தி, “அபராதம் செலுத்த தயாராக இருக்கிறோம்,” என்றார்.
இதை தொடர்ந்து ஆயுதப்படைகள் நல நிதியத்தில், 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அரசு தரப்புக்கு நவ., 14 வரை அவகாசம் அளித்து விசாரணையை நவ., 25க்கு ஒத்திவைத்தனர்.